2026ஆம் ஆண்டின் ஹஜ்ஜுப் பயணத்திற்காகச் சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட 900 இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன.
இந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 70 வயதை எட்டிய முதியோர், கூடுதலான எண்ணிக்கையில் புனிதப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கின்றனர்.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் திங்கட்கிழமை (டிசம்பர் 29) வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரர்களுக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களையும் வெற்றிகரமாக நிரப்பிவிட்டதாக மன்றம் தெரிவித்தது. உறுதிசெய்த யாத்திரிகர்கள் அனைவரும் மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பயண முகவர்களிடம் ஏற்பாடுகளைச் செய்து அவற்றுக்குரிய பணத்தையும் கட்டிவிட்டதாகக் கூறப்பட்டது.
ஹஜ்ஜுப் பயணத்தை உறுதிசெய்தோரில் 12 விழுக்காட்டினர் 70 வயதை எட்டியவர்கள் என்று மன்றம் சொன்னது. ஒப்புநோக்க, இந்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அத்தகையோரின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடுதான்.
அந்த வயதுப் பிரிவினரில் தகுதியானோருக்கு முன்னுரிமை வழங்கியதாக மன்றம் குறிப்பிட்டது. மூத்தோருக்குக் கூடுதல் ஆதரவளிக்கும் வகையில் அவ்வாறு செய்யப்படுவதாக அது கூறியது.
இடம் கிடைத்த அனைவரும், பயணம் மேற்கொள்ள மருத்துவ அடிப்படையில் தகுதியாக இருப்பதை உறுதிசெய்யும் மருத்துவ சுகாதாரச் சான்றிதழ்களைப் பெற்றுவிட்டனர். நாட்பட்ட மருத்துவப் பிரச்சினை ஏதும் இல்லை என்பதையும் பாதுகாப்பான முறையில் ஹஜ்ஜுச் சடங்குகளை உடல் ரீதியாக அவர்களால் நிறைவேற்ற முடியும் என்பதையும் சான்றிதழ் உறுதிப்படுத்தும் என்றது மன்றம்.
சவூதி அரேபியாவின் ஹஜ்ஜு, உம்ரா அமைச்சின் புதிய சுகாதார நிபந்தனைகளுக்கு ஏற்ப அது அமைகிறது.
ஹஜ்ஜுப் பயணம் என்பது மக்காவுக்கு மேற்கொள்ளப்படும் இஸ்லாமியப் புனித யாத்திரை. இஸ்லாத்தின் ஐந்தாம் தூணை குறிக்கிறது. முஸ்லிம்கள் அனைவரும் நிறைவேற்ற வேண்டிய ஐந்து அடிப்படைக் கடமைகளே ஐந்து தூண்கள் என வகுக்கப்பட்டுள்ளன. உடல் ரீதியாக இயலுமென்றாலும் நிதி வசதி இருந்தாலும் முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்வது அவசியம்.

