சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த $900மி. முதலீடு

சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த $900மி. முதலீடு

4 mins read
3032859e-67e6-4a16-b5a5-494c5afc127c
ஜூலை 30ஆம் தேதி பொங்கோல் பேருந்து சந்திப்பு நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அடுத்த எட்டு ஆண்டுகளில், சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த $900 மில்லியன், அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்கீழ் முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், புதிய நகரங்களில் பேருந்துச் சேவைகள் விரைவுபடுத்தப்படும், குறைவான நிறுத்தங்களில் நிற்கும் விரைவு துணைப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

புதிய பேருந்து இணைப்பு மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடமைப்புப் பேட்டைகளில் இருந்து நகரத்திற்குச் செல்லும் சேவைகள் உட்பட, அதிகமான உச்சநேர விரைவுப் பேருந்துச் சேவைகள், மேலும் அதிகப் போக்குவரத்து உள்ள எம்ஆர்டி தடங்களுக்கு துணையாகச் சேர்க்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூலை 30ஆம் தேதி அறிவித்தது.

மாறிவரும் பயண முறைகளுக்கு ஏற்ப, சில வழித்தடங்களில் அதிக பேருந்துப் பயணங்கள் சேர்க்கப்படும். புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். மேலும் சில பேருந்து வழித்தடங்களும் சரிசெய்யப்படும் என்று ஆணையம் மேலும் கூறியது.

“புதிய தவணை நிதியானது அதிக பேருந்துகளை வாங்கவும், அதிக பேருந்து ஓட்டுநர்கள், பராமரிப்பு ஊழியர்களைப் பணியமர்த்தவும், பேருந்து நிறுத்தங்கள் போன்ற புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். இதனால் பொதுப் பேருந்துக் கட்டமைப்பில் திட்டமிட்ட மேம்பாடுகளை மேற்கொள்ள முடியும்,” என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.

எத்தனை புதிய பேருந்துகள், சேவைகள் அறிமுகப்படுத்தப்படும், எத்தனை புதிய பணியாளர்கள் தேவை என்று கேட்கப்பட்டதற்கு திரு சீ, “இந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இந்தக் கேள்விகளுக்கு சரியாகப் பதிலளிப்பது மிகவும் சிரமம். ஏனெனில், இது விரைவில் மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல. இதை துல்லியமாகக் கூறுவதற்கு பல ஆண்டுகள் ஆகும்,” என்றார்.

“இதை ஒவ்வொரு நகரமாக மேற்கொள்ள வேண்டும்,” என்று அலெக்சாண்டிரா ரோட்டில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சின் தலைமையகத்தில் பேசிய அமைச்சர், “சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய ஒரே மாதிரியான வடிவமைப்பு எங்களிடம் இல்லை. இது அந்த இடத்தில் உள்ள பயணிகளின் தேவைகளைப் பொறுத்தது. அடித்தள ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து இதைச் செய்வோம்,” என்று விவரித்தார்.

அண்மைய ஆண்டுகளில் வீட்மைப்பு வளர்ச்சியின் வேகத்துடன் ஈடுகொடுக்கும் வகையில், பயண முறைகள் மாறி, பேருந்துச் சேவைகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

“வளர்ந்து வரும் புதிய வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள சில வளாகங்கள் நகர மையங்கள் மற்றும் எம்ஆர்டி நிலையங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளன.

“அதே நேரம், அதிக முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் உள்ள புதிய மேம்பாடுகளும் மக்களுக்குச் சிறப்பான சேவை வழங்கலாம்.

“குறிப்பாக, குறைவான பொதுப் பேருந்துச் சேவைகள் உள்ள பகுதிகளில் அல்லது குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, எம்ஆர்டி ரயில், பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை கூடும்போது அச்சேவை வழங்கப்படலாம்,” என்று ஆணையம் விளக்கியது.

உதாரணத்துக்கு, புதிய பேட்டைகளில் முன்னரே குடியேறும் குடியிருப்பாளர்களுக்கு சேவை செய்ய, ஈசூன் ஈஸ்ட்டில் புதிய மற்றும் வரவிருக்கும் பிடிஓ அடுக்குமாடி வீடுகளில் உள்ள குடியிருப்பாளர்களை அருகிலுள்ள காத்திப் எம்ஆர்டி நிலையத்துடன் இணைக்கும் வகையில், புதிய பேருந்துச் சேவையை அறிமுகப்படுத்த ஆணையம் விரும்புகிறது.

இந்தச் சேவையை செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்துவது நோக்கம்.

புதிய விரைவு துணைப் பேருந்துச் சேவைகளைப் பொறுத்தவரை, அவை குறைவான நிறுத்தங்களுடன் அதிக நேரடி வழிகளில் பயணிக்கும். இதனால், குடியிருப்பாளர்கள் முக்கிய போக்குவரத்து முனையங்களுக்குச் செல்வதற்கும் வெளியே செல்வதற்குமான பயண நேரம் குறையும்.

மத்திய வர்த்தக வட்டாரத்திற்குப் பயணிப்பவர்களுக்கு, அக்டோபரில் பொங்கோலில் இருந்து தொடங்கும் புதிய நகர நேரடிச் சேவை உட்பட அதிகமான உச்சநேர விரைவுப் பேருந்துச் சேவைகள் இருக்கும்.

தோ பாயோ ஈஸ்ட்டில் மாறிவரும் பயண முறைகளைப் பூர்த்தி செய்ய, இவ்வாண்டின் இறுதிக்குள் கால்டிகாட் எம்ஆர்டி நிலையத்தில் உள்ள தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் மற்றும் வட்டரயில் பாதைகளில் வசிப்பவர்களை இணைக்க தற்போதுள்ள பேருந்துச் சேவை நீட்டிக்கப்படும்.

பேருந்துக் கட்டமைப்பின் வழக்கமான மதிப்பாய்வுகளின் அடிப்படையில் இதுபோன்ற பல மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

“புதிய வீடமைப்புத் திட்டங்களின் அடிப்படையில், பேருந்துகளுக்கான எங்களின் தற்போதைய வளங்களைப் பார்த்தோம். அதே வேளையில் எம்ஆர்டி பாதைகளுக்கு இணையாக இயங்கும் நீண்ட பிரதான வழித்தடங்கள் போன்ற சில பேருந்து வழித்தடங்களை மேம்படுத்த முயல்கிறோம். சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதைச் செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது,” என்றும் அமைச்சர் சீ தெரிவித்தார்.

“ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், எங்கள் குடியிருப்பாளர்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதியை வழங்க முடிவு செய்துள்ளோம்,” என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்