சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு 65-67 வயதிற்குட்பட்ட கிட்டத்தட்ட 94,500 மூத்த குடிமக்கள் வேலையில் இருந்தனர்.
அந்த எண்ணிக்கை மத்திய சேம நிதி உறுப்பினர்களாக உள்ள 65-67 வயதுப் பிரிவினரில் 33 விழுக்காடு ஆகும்.
இந்தத் தரவுகளை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் புதன்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்டத்தின் வயது வரம்பை அரசாங்கம் உயர்த்துமா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்டதற்கு அமைச்சர் டான் விளக்கமளித்தார்.
தற்போது சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்டத்தின் உச்ச வயது வரம்பு 65ஆக உள்ளது.
“சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்ட வயது வரம்பை உயர்த்தினால் சந்தாத் தொகையும் கூடலாம். 65 வயதுக்குமேல் இறப்பு விகிதம் கூடுதலாக இருக்கும் என்பதால் சந்தாக் கட்டணம் உயரும். அதனால், ஓய்வுக்காலச் சேமிப்புத்தொகை குறையும்,” என்றார் டாக்டர் டான்.
கடந்த 2021ஆம் ஆண்டு மனிதவள அமைச்சு சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்டத்திற்கான வயது வரம்பை 60லிருந்து 65க்கு உயர்த்தியது.
வயது வரம்பை உயர்த்துவதிலும் சந்தாக் கட்டணத்தை நிர்ணயிப்பதிலும் சமநிலை பேணப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் மக்கள் பயனடைவர் என்றும் அமைச்சர் டான் கூறினார்.