டென்சென்ட், வீசேட் அல்லது யூனியன்பே போன்ற சீன நிறுவனங்களில் பணியாற்றுவதாகக் கூறிக்கொண்ட மோசடிப் பேர்வழிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெள்ளியைப் பறிகொடுத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியிலிருந்து குறைந்தது 46 புகார்கள் வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் 958,000 வெள்ளியை இழந்ததாகவும் காவல்துறை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.
தாங்கள் ஏற்கெனவே பதிவுசெய்த காப்புறுதிப் பாதுகாப்பு அல்லது வீசேட் துன்புறுத்தல் தடுப்பு வசதி போன்றவற்றுக்கான இலவச சந்தா முடியப் போவதாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் மோசடிப் பேர்வழி கூறுவார்.
அதன்பின், சந்தாவை ரத்துசெய்தால் ஒழிய, அத்தளங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து சந்தாவிற்கான கட்டணம் தானாகவே கழிக்கப்பட்டுவிடும் என்று அம்மோசடிப் பேர்வழி சொல்வார்.
பின்னர் அவர்களது தனிப்பட்ட விவரங்களைக் கூறி, அடையாளங்களையும் வங்கிக் கணக்கு விவரங்களையும் சரிபார்க்குமாறும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்புமாறும் அந்த மோசடிப் பேர்வழி கேட்டுக்கொள்வார்.
“வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்ட பிறகு அவர்களது பணம், மீண்டும் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே திருப்பியனுப்பப்படும் என்று உறுதிகூறப்படும்,” என்று காவல்துறை தெரிவித்தது.
“சில வேளைகளில், வங்கிப் பரிவர்த்தனை வரம்பை உயர்த்தவும் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வாட்ஸ்அப் திரைப்பகிர்வு வசதி மூலம் பாதிக்கப்பட்டவர்க்கு மோசடிப் பேர்வழி வழிகாட்டுவார்,” என்றும் காவல்துறை கூறியது.
இதனையடுத்து, மோசடிகளில் சிக்காமல் இருக்க ஸ்கேம்ஷீல்டு செயலியைப் பயன்படுத்துமாறும் பரிவர்த்தனை வரம்பு, இருமுறை உறுதிப்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்களை நிறுவுமாறும் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

