2023ல் ஆரோக்கியப் பாதையில் சிங்கப்பூரர்கள்

2 mins read
ae92ae3a-070b-4e0e-8d34-314ff75e4311
2023ஆம் ஆண்டில் மேலும் பல சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி செய்தல், மன உளைச்சலைச் சமாளிப்பது, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக ஆய்வு தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் அதிகரித்ததாக தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வை சுகாதார அமைச்சு 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தியது.

ஆய்வில் 18 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் பங்கெடுத்தனர்.

கூடுதல் சிங்கப்பூரர்கள் உடற்பயிற்சி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, புகைபிடிக்கும் பழக்கத்தைப் பலர் கைவிட்டனர்.

மனநலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆலோசனை நாடியோர் எண்ணிக்கையும் அதிகரித்தது.

தங்களுக்கு நாட்பட்ட நோய் உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டோர், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டாரின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் ஏற்றம் கண்டதாக ஆய்வு தெரிவித்தது.

2022ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, சிங்கப்பூரர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டில் மேலும் பல சிங்கப்பூரர்கள் ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி செய்தல், மன உளைச்சலைச் சமாளிப்பது, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.

இருப்பினும், தொடர்ச்சியாகப் பேரளவில் மதுபானம் அருந்தும் பழக்கம் தொடர்ந்து அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மார்பகப் புற்றுநோய்க்கான மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மூன்று பிரதான இனத்தவர்களில் இந்தியர்கள் அதிகளவில் நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொண்டதாக (78.4%) தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது இடத்தில் சீனர்களும் (61.4%), மூன்றாவது இடத்தில் மலாய்க்காரர்களும் (52.6%) உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்