தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெருநாளன்று தொழும் பேறு; இறையன்பர்கள் மகிழ்ச்சி

2 mins read
25e022c7-fa7c-4f1b-abc4-fe9140531ec3
நோன்புப் பெருநாளன்று அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்கு 2,000க்கும் மேற்பட்டோர் வருகை அளித்தனர். - படம்: சுந்தர நடராஜ்

தேக்கா வட்டாரத்தின் டன்லப் சாலையில் அமைந்துள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசல், திங்கட்கிழமை (மார்ச் 31) காலை 6 மணியிலிருந்தே இறையன்பர்களை வரவேற்றது .

காலை 7 மணி முதல் மூன்று அமர்வுகளில் நடத்தப்பட்ட தொழுகைகளில் மொத்தம் கிட்டத்தட்ட 2,000 பேர் கலந்துகொண்டதாகப் பள்ளிவாசல் நிர்வாக அவை உறுப்பினர் நூருல் அமீன் தெரிவித்தார். அதிகக் கூட்டம் கொண்ட தொழுகைக்கான முதல் அமர்வில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.

“ரமலான் மாதம் முழுவதும் வார நாள்களில் தினமும் 1,000 பேரும் வாரயிறுதி நாள்களில் 1,200 பேரும் தொழுகைக்கு வந்தனர். அவர்களுக்குச் சேவையாற்றுவதில் தொண்டூழியர்கள் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டனர்,” என்று நூருல் கூறினார்.

அதிகாலை ஆறு மணிக்கு எழுந்து நோன்புப் பெருநாளுக்குத் தயாராகி, பள்ளிவாசலுக்கு வந்ததாகத் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அப்துல் மாலிக், 54, கூறினார்.

“எல்லாரும் ஒரே கூரையின்கீழ் தொழுது, நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்ததால் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது. அதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்,” என்றார் அவர்.

ஒவ்வோர் ஆண்டும் நோன்புப் பெருநாளன்று பள்ளிவாசலுக்கு வந்து தொழுவது இனிமையான நினைவுகளை அளிப்பதாக சுயதொழில் உரிமையாளர் ஷஃபீக் முஹம்மது யூசுஃப், 53, தெரிவித்தார்.

“இனி வரும் ஆண்டுகளிலும் பெருநாளன்று தொழும் வாய்ப்புக்காக வேண்டிக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் தற்போதுள்ள 72 பள்ளிவாசல்களில் ஏழு, இந்திய முஸ்லிம்களின் நிர்வாகத்தின்கீழ் உள்ளவை. அவற்றில் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றான அப்துல் கஃபூர் பள்ளிவாசல், 1859ல் நிறுவப்பட்டது. பின் 1979ல் தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் இடம்பெற்றது.

அங்குலியா பள்ளிவாசலில் மக்கள் தொழுகை.
அங்குலியா பள்ளிவாசலில் மக்கள் தொழுகை. - படம்: சுந்தர நடராஜ்

அப்துல் கஃபூர் பள்ளிவாசலைப்போல லிட்டில் இந்தியாவிலுள்ள அங்குலியா பள்ளிவாசலும் இந்தியச் சமூகத்தினரால் அதிகம் நாடப்படும் இடங்களில் ஒன்று.

பள்ளிவாசல் மட்டுமின்றி, அதன் வளாகத்தில் உள்ள திடலில் பலர், வரிசைகளாகப் பாய்விரித்துத் தொழுதனர். தொழுகைக்கான மூன்றாவது அமர்வில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் பலர் கலந்துகொண்டனர்.

நோன்பு நோற்றதன் பலனாக இப்பெருநாள் இறையன்பர்க்கு அமைவதாகப் பள்ளிவாசலின் துணை இமாம் பாரூக் அஹமது கூறினார்.

“இந்நாளில் இறைவன் நம் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்