மாதத்திற்கு குறைந்தது $30,000 சம்பாதிக்கும் குடும்பங்களின் விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 2020ல் 7.4 விழுக்காடாக இருந்த இந்த உயர் வருவாய் குடும்பங்களின் எண்ணிக்கை, 2025ல் 13.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அதாவது, தற்போது சிங்கப்பூரில் உள்ள ஏழு குடும்பங்களில் ஒன்று இந்த அளவிலான வருமானத்தைப் ஈட்டுகிறது.
மாதத்திற்கு குறைந்தது $12,000 வருமானம் ஈட்டும் குடியிருப்பாளர்களின் குடும்பங்களின் எண்ணிக்கை 2020ல் 38.2 விழுக்காட்டிலிருந்து 2025ல் 51.6 விழுக்காட்டுக்கு அதிகரித்துள்ளன.
சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான பொதுக் குடும்பக் கருத்தாய்வு அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் குடும்ப வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.
சராசரி குடும்பச் சந்தை வருமானம் முதன்முறையாக $12,000 வரம்பைத் தாண்டி, $12,446 ஆகி உள்ளது. இது 2020ல் $9,099ஆக இருந்தது. சந்தை வருமானம் என்பது பணி மூலம் ஈட்டும் வருவாய், வாடகை, முதலீடு போன்ற பணிசாராத பிற வழிகள் மூலம் பெறும் வருவாய் இரண்டும் சேர்ந்தது.
பணவீக்கத்தைச் சரிசெய்த பிறகு, இது ஆண்டுக்கு 3.2 விழுக்காடு வளர்ச்சியாகும்.
நாட்டின் மூன்று முக்கிய இனக் குழுக்களின் குடும்ப வருமானமும் உண்மையான அடிப்படையில் அதிகரித்துள்ளது.
மிக உயர்ந்த வளர்ச்சி கண்ட இந்தியக் குடும்பங்கள்
இந்தியக் குடும்பங்கள் ஆண்டுக்கு 3.5 விழுக்காடு என்ற மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்தியரின் சராசரி மாத வருமானம் $13,382.
சீனக் குடும்பங்கள் 3.1 விழுக்காடு வளர்ச்சியுடன் $12,969, மலாய் குடும்பங்கள் 2.3 விழுக்காடு வளர்ச்சியுடன் $8,581 சராசரி வருமானம் ஈட்டுகின்றன.
குடும்பங்களின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு வேலைவாய்ப்பு மூலமே கிடைக்கிறது.
அதே வேளையில், தம்பதியர் இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டில், இருவருமே சம்பாதிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 52.5 விழுக்காட்டிலிருந்து 56.6 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கணவர் மட்டும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் விகிதம் 24.9 விழுக்காட்டிலிருந்து 21 விழுக்காடாகக் குறைந்துள்ளது. மனைவி மட்டும் வேலை செய்யும் குடும்பங்களின் விகிதம் 7.5 விழுக்காடாக நிலையாக நீடிக்கிறது.

