ஈசூன் கூட்டுரிமை வீட்டில் செவ்வாய்க்கிழமையன்று (மே 28) தீ விபத்து நிகழ்ந்ததில் ஒருவர் காயமுற்றார்; 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
93, ஈசூன் ஸ்திரிட் 81 எனும் முகவரியில் அமைந்துள்ள ஆர்ச்சர்ட் பார்க் கூட்டுரிமை அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியது குறித்து முற்பகல் 11.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தெரிவித்தது.
இதனையடுத்து, ஈசூன், அங் மோ கியோ தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் அங்கு சென்றபோது, மூன்றாம் தளத்திலிருந்த அவ்வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் காண முடிந்ததாகக் குடிமைத் தற்காப்பு படை கூறியது.
தீ மூண்டபோது அவ்வீட்டினுள் ஒருவரும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்புப் படையினர் உள்ளே சென்று பார்த்தபோது, சலவை இயந்திரமும் துணி உலர்த்தியும் தீப்பிடித்து எரிந்ததை அவர்கள் கண்டனர். பின்னர் அவர்கள் நீரைப் பீய்ச்சியடித்து, தீயை அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்டை வீடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.
புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் ஒருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
துணி உலர்த்தியில் ஏற்பட்ட மின்னியல் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு பிப்ரவரியில் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2023ஆம் ஆண்டு 1,954 தீச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இது, அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் 155 அதிகம்.

