பூகிசில் எரிவாயுக் கசிவு; 60 பேர் வெளியேற்றம்

1 mins read
f8476a3d-d9b5-4d49-99f4-9abaa798ec2b
லியாங் சியா ஸ்திரீட்டில் சம்பவம் நேர்ந்தது. - படம்: ‌ஷின் மின்

பூகிஸ் வட்டாரத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 5) மாலை எரிவாயுக் கசிவு ஏற்பட்டது.

அதனால் சுமார் 60 பேர் வெளியேற்றப்பட்டனர்.

எண் 33 லியாங் சியா ஸ்திரீட்டில் இருக்கும் ‘ஒரியென்டல் சைனீஸ் ரெஸ்டரோன்ட்’ உணவகத்தின் பின்புறத்தில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டதாக புதன்கிழமை மாலை 6.45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் அப்பகுதியில் இருந்தோரை வெளியேற்றினர்.

தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாயைக் கொண்டு எரிவாயுவைக் கலைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

கசிவு ஏற்பட்ட எரிவாயு குழாய்க்கான பழுதுபார்ப்புப் பணிகள் நடந்து வருவதாக எஸ்பி குழுமம் தெரிவித்தது. எரிவாயுக் கசிவு குறித்துத் தகவல் கிடைத்ததுடன் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் குழுமத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எரிவாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்