இளைய சிங்கப்பூரர் இருவரில் ஒருவர் திறன்பேசிப் பயன்பாட்டால் பாதிப்பு: ஆய்வு

2 mins read
4741801c-65ca-4656-92cf-e64866fbbb02
நீண்டநேரம் திறன்பேசியைப் பயன்படுத்துவதால் மணிக்கட்டு, முதுகு, கழுத்தில் ஏற்படும் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15க்கும் 21க்கும் இடைப்பட்ட வயதுடைய இளைய சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் ‘திறன்பேசிப் பயன்பாட்டு சிக்கல்’ என்னும் நடத்தைக்கு ஆளாகி உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.

சீரற்ற மனநலன் அதுபோன்ற நடத்தைக்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வு தெரிவித்து உள்ளது.

திறன்பேசியைச் சார்ந்து இருத்தல், திறன்பேசியில் செலவிடும் நேரம், அவற்றால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ‘திறன்பேசிப் பயன்பாட்டு சிக்கல்’ என்பதை, ஆய்வை நடத்திய மனநலக் கழகத்தின் (ஐஎம்எச்) ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்து உள்ளனர்.

அந்த வயதுடைய இளையர்கள் திறன்பேசிச் சாதனங்கள் இல்லாதபோது பொறுமை இழக்கிறார்களா அல்லது சிடுசிடுவென எரிச்சல்படுகிறார்களா என்பதும் அந்தச் சாதனங்களைப் பற்றியே அவர்கள் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டு இருக்கிறார்களா என்பதும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அம்சங்களில் அடங்கும்.

நீண்டநேரம் திறன்பேசியைப் பயன்படுத்துவதால் மணிக்கட்டு, முதுகு மற்றும் கழுத்தில் ஏற்படும் வலி போன்ற உடல்நலப் பிரச்சினைகளிலும் ஆய்வு கவனம் செலுத்தியது.

அதேபோல, திறன்பேசிப் பயன்பாடு காரணமாக வேலையில் அல்லது படிப்பில் கவனமின்மை ஏற்படுகிறதா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

உள்ளூரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுக்கு உள்துறை அமைச்சும் சுகாதார அமைச்சும் நிதி ஆதரவு வழங்கின.

‘திறன்பேசிப் பயன்பாட்டு சிக்கல்’ உள்ளோர், அத்தகைய சிக்கல் இல்லாதோரைக் காட்டிலும் குறைந்தபட்சம் மூன்று மடங்கு மிதமான அல்லது கடுமையான மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதை ஆய்வு கண்டறிந்தது.

தொடர்புடைய செய்திகள்

திறன்பேசிப் பயன்பாட்டால் எந்த அளவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்பதையும் அதனால் மனநிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு உள்ளது என்பதையும் கண்டறிய 15 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்கள் இடையே நடத்தப்பட்ட முதல் நாடளாவிய ஆய்வு இது.

ஆய்வில் பங்கேற்ற 15 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்களில் 46.4 விழுக்காடு, அதாவது கிட்டத்தட்ட இருவரில் ஒருவர் திறன்பேசிப் பயன்பாட்டு சிக்கல் நடத்தை உள்ளோர் என்பதும் ஆய்வில் தெரிய வந்தது.

இந்த விகிதம் 15 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டோரில் 30.2 விழுக்காடு, அதாவது மூவரில் ஒருவராக இருந்தது என்கிறது ஆய்வு.

குறிப்புச் சொற்கள்