தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவுக்காக 166,000 வெள்ளிக்குமேல் நிதி திரட்டிய மலாய் முஸ்லிம் சமூகம்

2 mins read
d1e049f8-9a49-4174-9005-2482d3258eeb
காஸாவுக்காக சிங்கப்பூரில் நடைபெற்ற நிதிதிரட்டு நிகழ்ச்சி. - படம்: பெரித்தா ஹரியான்

மலாய்-முஸ்லிம் சமூகத்தினர் பயன்படுத்தும் தொண்டூழியத் தளமான எம்3@டவுன்ஸ், காஸாவுக்காக இதுவரை 166,200 வெள்ளி நிதி திரட்டியுள்ளது.

ரஹ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்ட ‘எம்3 இன் எஸ்ஜி60 ஆக்‌ஷன்’ (M3 in SG60 Action) நிதிதிரட்டு நடவடிக்கை பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை சிங்கப்பூரில் 11 குடியிருப்புப் பகுதிகளில் நிதி திரட்டு நடவடிக்கை, வரும் ஏப்ரல் 6ஆம் தேதி முடிவடையும்.

மனிதாபிமான உதவிக்காக காஸாவுக்கு 600,000 வெள்ளி நிதியைத் திரட்டுவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, இந்தத் திட்டத்தை சனிக்கிழமை (மார்ச் 1) விஸ்மா கேலாங் செராயிலுள்ள ரமலான் சந்தையில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி மேடையிலுள்ள நெகிழி உண்டியலில் தங்களது காசோலையைப் போட்டுச் சென்ற நன்கொடையாளர்களுக்கு திரு மசகோசும் பிரதமர் அலுவலக அமைச்சருமான மாலிக்கி ஒஸ்மானும் நன்றி தெரிவித்தனர்.

மலாய்-முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தொழில்துறையினரும் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய திரு மசகோஸ், “பாலஸ்தீனர்களின் துயரத்தைச் சக மனிதர்களாகிய நம்மால் பகிர்ந்துகொள்ள முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன்,” என்றார்.

இந்தத் துயரத்திற்கு இடையிலும், பலதரப்பட்ட சிங்கப்பூர் மக்களும் ஒன்றுகூடி, பரிவுணர்வால் ஒன்றிணைந்து உதவுவதில் உறுதியாக நிற்பதைக் காண்பது உண்மையில் வியக்கத்தக்கது என்றார் திரு மசகோஸ்.

விருந்தோம்பல் துறை, உணவுபானத்துறை, இல்லப் புதுப்பிப்பு, சுற்றுலா வணிகங்கள், ஆலயங்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு நிதி அளித்துப் பங்களித்துள்ளனர்.

நிதிதிரட்டுக்கு முஸ்லிம் அல்லாதோரும் ஆதரவு வழங்குவதைக் கண்டு நெகிழ்வதாக ‘எம்3 அட் பாசிரிஸ்-பொங்கோல்’ தலைவர் அஸுவான் டான் தெரிவித்தார்.

“பணம் மட்டும் அனுப்பும் முயற்சி இதுவன்று. நம்பிக்கையை அளிக்கும் முயற்சியாகவும் இது இடம்பெறுகிறது. மக்கள் சந்திக்கும் சவால்களால் அவர்களுக்கு அடையும் வேதனை எங்கள் எல்லோருக்கும் புரிகிறது. நாங்களும் பங்களிக்க விரும்புகிறோம்,” என்று திரு டான் கூறினார்.

அக்டோபர் 2023 முதல் போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலும் பாலஸ்தீனக் குழுவான ஹமாசும் 20235 ஜனவரி தொடக்கத்தில் ஆறு வார சண்டை நிறுத்தத்திற்கு இணங்கின.

ஐக்கிய நாட்டு குழந்தைகளுக்கான அவசரகால நிதியம், எகிப்திய செம்பிறை இயக்கம், உள்ளூர் நிறுவனமான ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ ஆகிய அமைப்புகளுடன் ரஹ்மத்தான் லில் அலாமின் இணைந்து பணியாற்றி வருகிறது.

குறிப்புச் சொற்கள்