தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு வயதுக் குழந்தையைக் கொடூரமாகத் துன்புறுத்தி, இறந்ததும் உடலை எரித்த தம்பதி

3 mins read
6e22308f-6bd3-448e-a5d0-ea600ab74989
பாய உபி தொழிற்பேட்டையில் ஓர் உலோகப் பீப்பாயில் சிறுமியின் சடலத்தை வைத்து அவரது தாயார் ஃபூ லி பிங்கும் காதலன் வோங் ஷி ஸியாங்கும் எரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. - படம்: எஸ்பிஎச் சீன ஊடகப் பிரிவு

மேகன் குங்கிற்கு நான்கு வயதானபோது, தாயாலும் தாயாரின் காதலனாலும் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, உடலாலும் உணர்வு ரீதியாகவும் அவமானப்படுத்தப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக அவதிப்பட்டு உயிரிழந்தார்.

அவரைப் பிரம்பால் அடித்தும் அறைந்தும் துன்புறுத்தினார் வேலையில்லாத அவரது தாயார் ஃபூ லி பிங், 29. ஃபூவின் காதலரான பொறியாளர் வோங் ஷி ஸியாங்கும், 38, குப்பைத் தொட்டியில் இருந்து உணவை உண்ணும்படி மேகனை வற்புறுத்தினார்.

சிறுமி பட்டினி கிடந்ததோடு உடுத்த உடையும் கொடுக்கப்படவில்லை. மாடிமுகப்பில் உள்ள ஒரு பெட்டியில் மழையிலும் வெயிலிலும் அவர் தூங்க வைக்கப்பட்டார்.

இருவரும், சூட்ஸ்அட்குலிமார்ட் அடுக்குமாடி வீட்டை வாடகைக்கு எடுத்து மேகனுடன் தங்கியிருந்தனர். இந்தத் தம்பதியின் நண்பர் 35 வயது நவ்வெல் சுவா ருவோஷியும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து போதைப் பொருள்களைப் பயன்படுத்தினார். மேகன் துன்புறுத்தப்படுவதை சுவா தடுக்கவில்லை. ஆனால் சில சம்பவங்களை அவர் தனது கைப்பேசியில் பதிவு செய்தார்.

பிப்ரவரி 21, 2020 அன்று வீட்டில் மேகனின் வயிற்றில் வோங் குத்தினார்.

மேகன் இறந்தபிறகு அடுத்த நான்கு மாதமும் மூவரும் ஹோட்டல்களிலும் வேறொரு வீட்டிலும் தங்கினர்.

மேகனின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று ஃபூவும் வோங்கும் திட்டம் போட்டனர். சடலத்தை எரித்துவிடலாம் என முடிவு செய்து பல்வேறு வடிவமைப்பில் உள்ள பீப்பாய்களை அவர்கள் சோதித்துப் பார்த்தனர்.

2020 மே 8ஆம் தேதி மேகனின் உடலை உலோக பீப்பாயில் வைத்து வோங்கின் முயற்சியால் எரிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மேகனின் தந்தை குங் வெய் நான், 37, மகளின் இருப்பிடம், பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்தார். அவர் கடைசியாக பிப்ரவரி 2017ஆம் தேதி தம் மகளைப் பார்த்தார்.

அதன் பிறகு போதைப் பொருள் புழக்கத்திற்காக மூன்று ஆண்டுகள் அவர் மறுவாழ்வு இல்லத்தில் வைக்கப்பட்டார்.

ஜூலை 24, 2020 அன்று மேகன் காணாமல் போனது தொடர்பில் ஃபூ, வோங்கையும் சுவாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு மேகனின் மரணம் தொடர்பாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிப்ரவரி 28 அன்று, ஃபூவும் வோங்கும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.

அரசாங்க துணை அரசு வழக்கறிஞர் மார்க்கஸ் ஃபூ, பெற்றோரின் கடமைகளைக் கைவிட்ட மேகனின் தாயாருக்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேகன் துன்புறுத்தப்பட்டதை அரசுத் தரப்பு பட்டியலிட்டபோது சில சம்பவங்களின் காணொளிகள் காட்டப்பட்டன. இந்தக் காணொளிகள் மூவரிடமிருந்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவிலிருந்தும் எடுக்கப்பட்டன. காணொளிக் காட்சிகளால் நீதிமன்றமே சோகத்தில் மூழ்கியது. ஒரு பெண் கண்ணீருடன் வெளியேறினார்.

மேகனின் தாயார் ஃபூ, 2020 ஜூலை 25 முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 28ஆம் தேதி வோங்கின் வழக்கு பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வோங், நோக்கமில்லா மரணம் விளைவித்தது உட்பட 15 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். 12 போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன.

சுவாவின் வழக்கு நிலுவையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்