ஒருங்கிணைப்பை துரிதப்படுத்துவது ஆசியானின் உடனடிப் பணி: பிரதமர்

3 mins read
65fb8778-eb96-4e34-8957-95dd08e7c69c
46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பின் சிங்கப்பூர் செய்தியாளர்களைப் பிரதமர் வோங் சந்தித்தார்.  - படம்: சாவ் பாவ்

மாறிய உலகில் தெளிவான, ஆக்கபூர்வமான வழிகளில் ஆசியான் பங்காற்ற வேண்டும். இல்லையெனில் அந்த வட்டார அமைப்பு செயலற்றதாகிவிடும். ஆக, ஆசியான் உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பைத் துரிதப்படுத்துவது முன்பைவிட அவசரமான பணி என்று கூறினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

நிலையற்ற, பதற்றமான உலக சூழலில் புதிய நிலவரம் குறித்த யதார்த்த கலந்துரையாடல்கள் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் நடந்தன என்றும் உடனடியாகச் செய்யவேண்டிய இந்தப் பணி குறித்து அனைத்து தலைவர்கள் அறிந்துள்ளதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டபின்னர், மலேசியத் தலைநகரிலிருந்து புறப்படும் முன் சிங்கப்பூர் செய்தியாளர்களைப் பிரதமர் வோங் சந்தித்தார்.

ஆசியானில் கலந்துரையாடப்பட்ட அம்சங்கள், வெளி பங்காளிகளுடனான கலந்துரையாடல்கள், உலகப் பொருளியல் பதற்றநிலை, ஆசியான் தலைமைத்துவத்தின் செயல்பாடு போன்ற அம்சங்களில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இணக்கம் காணப்பட்ட உடன்பாடுகளைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது, ஆசியான் நாடுகள் மத்தியில் முற்றிலும் வர்த்தக வரிகளை நீக்குவது, வரிகளுக்கு அப்பாலான வர்த்தகத் தடைகளைக் குறைப்பது, சீரான வணிக முறையைப் பொருள்களுக்கு மட்டுமல்லாமல் சேவைகளுக்கும் செயல்படுத்துவது, ஆசியானை விருப்பமான முதலீட்டு மையமாக்குவது போன்றவற்றில் ஆசியான் நாடுகள் உடனடி கவனத்தை செலுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சிங்கப்பூரர்களுக்குப் பலன்

ஆசியானின் ஒருங்கிணைப்பும் பங்காளித்துவங்களும் வணிகச் சமூகத்துக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இலக்கு என்றும் இவை அனைத்தும் சிங்கப்பூரர்களுக்குப் பலன் தரும் வகையிலே அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு சிங்கப்பூர் புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டு சிங்கப்பூர் புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

வணிகங்கள் இதுவரை அறியாத சந்தைகளிலும் அவர்கள் இனி வாய்ப்புகளைத் தேட அரசாங்கம் பல வழிகளில் முயற்சி செய்யும் என்று குறிப்பிட்டார்.

உதாரணமாக, புதிய சந்தைகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வது, அந்தந்த நாடுகளில் ஒரே வகை வணிகங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்துவது, தனியார் துறை உடன்பாடுகளை எட்ட துணை புரிவது போன்றவற்றை அவர் சுட்டினார்.

தடையற்ற வர்த்தக உடன்பாடுகள், பங்காளித்துவங்கள் போன்ற அரசாங்கத்துக்கிடையில் செய்யப்படும் இணக்கங்கள் வணிக சமூகத்துக்கு, குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குப் பலன் பயக்கவே என்று அவர் கூறினார்.

தேர்தலுக்குப் பின் முதல் பயணம்

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் வோங் சந்தித்த அனைத்துத் தலைவர்களும் அண்மையில் நடந்த தேர்தலில் தாம் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாக திரு வோங் பகிர்ந்தார்.

முன்னதாக, திங்கட்கிழமை உச்சநிலை மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றிய மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் திரு வோங்கிற்குக் கிடைத்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் அப்படி வேறு சூழலாக இருந்திருந்தால் மாற்று பிரதிநிதியையே வரவேற்றிருப்போம் என்று சிரிப்பொலி அரங்கை நிரப்ப கூறினார்.

அனைத்து நாடுகளும் தேர்தலைக் கவனித்துவந்துள்ளதைக் காட்டுவதாகக் குறிப்பிட்ட திரு வோங், தமக்கு இத்தகைய வலுவான, தெளிவான ஆதரவு கிடைக்காமல் போயிருந்தால் மற்ற நாடுகள் சிங்கப்பூர் மீது கொண்டுள்ள கண்ணோட்டம் மாறுபட்டதாக இருந்திருக்கும் என்று விளக்கினார்.

தமக்கும் தமது அணிக்கும் சிங்கப்பூரர்கள் வழங்கிய வலுவான ஆதரவிற்கு நன்றியுடன் இருப்பதாகவும் அதனால் மற்ற நாடுகளை அணுகுவதில் உறுதியுடன் செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் மாறிய உலகில் சிங்கப்பூரின் நிலையை மேம்படுத்தவும் உறுதிசெய்யவும் அது துணைநிற்கும் என்றார்.

சிங்கப்பூரில் ஆசியான்

இன்னும் சில ஆண்டுகளில் ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்கும் பொறுப்பு சிங்கப்பூருக்கு வர உள்ளதால் அதிகாரிகள் அதற்குத் தயாராகி வருகின்றனர் என்று பிரதமர் வோங் தெரிவித்தார். இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு சிங்கப்பூர் அந்தப் பொறுப்பை ஏற்றது. சுழற்சி முறையில் தலைமைத்துவம் ஒவ்வோர் உறுப்பு நாடும் அந்தப் பணியை ஏற்கும்.

மலேசியா இந்த ஆண்டு துடிப்புடனும் ஆக்கபூர்வமாகவும் பணியைச் செய்துவருவதைச் சுட்டிய திரு வோங், திரு அன்வாருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் சொன்னார்.

அமெரிக்க வரிவிதிப்பு, மியன்மாரின் மனிதாபிமான சீர்கேடு, காஸா சண்டை போன்ற உலக சவால்கள் பலவற்றை எதிர்நோக்கும் சூழலில் ஆசியானை வழிநடத்தி முனைப்புடன் மலேசியா செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அக்டோபரில் மலேசியா அடுத்த உச்சநிலை மாநாட்டை ஏற்பாடு செய்யும் என்ற நிலையில் இன்னும் அந்தப் பணி முடியவில்லை என்பதையும் நினைவூட்டினார்.

குறிப்புச் சொற்கள்