ஊழியரணிக்குத் திரும்புவதை எளிதாக்கும் வகையில் அக்சென்ச்சர் (Accenture) நிறுவனம் 10,000 பெண்களுக்கு இலவசத் தொழில்நுட்பப் பயிற்சி வழங்கவிருக்கிறது.
மகப்பேற்று விடுப்பு அல்லது பணியிலிருந்து இடைக்காலமாக விலகியுள்ள பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், பெரும்பாலும் இணையம் வழியாக இடம்பெறும் 100 மணி நேரப் பயிற்சியில் பங்கேற்பர். ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, திட்டப்பணி நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் அக்சென்ச்சர் நிறுவனமும் அதன் பங்காளிகளும் பயிற்சி வழங்கும்.
‘மதிப்புமிக்க மகளிர்’ (Women of Worth) என அழைக்கப்படும் இத்திட்டம் சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
உலகளவில் தொழில்நுட்பத் திறனாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவும் வேளையில், ஊழியரணிக்குத் திரும்பத் தயங்கும் பெண்களுக்கு ஆதரவளித்து, அப்பணியிடங்களை நிரப்ப உதவுவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.
அக்சென்ச்சர் நிறுவனத்தில் பணிபுரியாத சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் இந்தத் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அக்சென்ச்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இலியானா லியூ தெரிவித்தார்.
சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்பும் அக்சென்ச்சர் நிறுவனப் பங்காளிகளும் பரிந்துரைப்போருடன், பொதுமக்களிலிருந்து வரும் விண்ணப்பங்களில் இருந்தும் பயிற்சி பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று திருவாட்டி லியூ கூறினார்.
தேர்வு விதிமுறைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றபோதும், வேலைக்குத் திரும்ப ஆர்வம் காட்டுவோர் அல்லது தொழில்நுட்பப் பின்னணி கொண்டவர்களை ஈர்க்க இந்தப் பயிற்சித் திட்டம் இலக்கு கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
ஒவ்வொரு பாடத்தொகுதி முடிவிலும் பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.