வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மாலை பீஷான் வட்டாரத்தில் விபத்து நிகழ்ந்ததைத் தொடர்ந்து பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
பீஷான் ஸ்திரீட் 10ல் நிகழ்ந்த விபத்து குறித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கேட்கப்பட்டக் கேள்விகளுக்குப் பதிலளித்தது. ஒருவரை டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றதாகவும் அது குறிப்பிட்டது.
குவோ சுவான் பிரெசிபிட்டேரியன் உயர்நிலைப் பள்ளிக்குக் அருகே பீஷான் ரிட்ஜஸ் வீடமைப்புக் கழகப் பகுதிக்கு முன்னால் விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான வேன்
விபத்தில் வேன் வாகனம் ஒன்று சம்பந்தப்பட்டிருந்தது. டான் என்று மட்டும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், குவோ சுவான் பிரெசிபிட்டேரியன் பள்ளிக்கு அருகே உள்ள சந்திப்பில் தான் நிறுத்தியதாகத் தெரிவித்தார். அங்கு வேன் ஒன்று ஒரு பெண்ணை மோதியதைப் பார்த்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்துக்கு நேர் எதிரே வசிக்கும் ஒருவர், மடிக்கணினியில் தான் வேலை செய்துகொண்டிருந்தபோது பெரிய விபத்து சத்தம் கேட்டதாகத் தெரிவித்தார்.
வழிப்போக்கர் ஒருவர் விபத்தைக் காணொளியில் பதிவுசெய்தார். அந்தக் காணொளியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்த்தது.
வேன் ஒன்று அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றுக்கு அருகே உள்ள நடைபாதையில் சாய்ந்துகிடந்தது அதில் தெரிந்தது. அங்கு மக்கள் பலர் இருந்ததும் பிறகு அவசர மருத்துவ உதவி வாகனம் ஒன்று சம்பவ இடத்தைத் தாண்டிச் சென்றதும் தெரிந்தது.
வேனுக்குப் பெரும் சேதம்
வேனின் கண்ணாடி பெரிய அளவில் சேதமடைந்திருந்தது. அதன் இரு இடது, வலது புறங்களில் இருக்கும் கண்ணாடிகள் சேதமடைந்து வாகனத்திலிருந்து அகன்று கிடந்தன.
குறைந்தது இரண்டு காவல்துறை வாகனங்களும் பல காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்ததும் தெரிந்தது. பிற்பகல் மூன்று மணியளவில் பழுதான வாகனங்களை ஏற்றிச் செல்லும் லாரி சம்பவ இடத்தை வந்தடைந்தது.
விபத்து குறித்து கூடுதல் தகவல் சேகரிக்க ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளது.

