தீவு விரைவுச்சாலை நோக்கிச் சென்ற புக்கிட் தீமா விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை லாரியுடன் மோதிய மோட்டார்சைக்கிளோட்டி மரணமடைந்தார்.
ஃபேஸ்புக் காணொளியொன்றில் கட்டுமானப் பொருள்களை ஏற்றியிருந்த லாரிக்கு அருகில் காவல்துறையின் நீல நிறக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. ரத்தம் சிதறிக் கிடப்பதையும் காவல்துறை அதிகாரிகள் மூவரும் வெள்ளைப் பாதுகாப்புத் தலைக்கவசம் அணிந்த ஆடவர் ஒருவரும் சம்பவ இடத்தில் இருப்பதையும் காணொளி காட்டுகிறது.
காவல்துறையின் மூன்று கார்கள், இமாஸ் (Emas) மீட்பு வாகனம், நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மோட்டார்சைக்கிள், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் அவசரகால வாகனம் முதலியவற்றையும் அதில் பார்க்க முடிகிறது.
சிலேத்தார் விரைவுச்சாலை வெளிவழிக்கு முன்பு, தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் விபத்து நேர்ந்ததாகக் காலை மணி சுமார் 6.50க்குத் தகவல் கிடைத்தது என்று குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் கூறின.
மோட்டார்சைக்கிளை ஓட்டிய 23 வயது ஆடவர் சம்பவ இடத்தில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மோட்டார்சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 23 வயது ஆடவர் நினைவிழந்த நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
லாரி ஓட்டுநரான 39 வயது ஆடவர் விசாரணையில் காவல்துறைக்கு உதவி வருகிறார்.