2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், பீஷான் பணிமனையில் நிகழ்ந்த விபத்தில் ‘எஸ்எம்ஆர்டி டிரேன்ஸ்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளில் ஒருவர் மாண்டார்.
இதன் தொடர்பாக திங்கட்கிழமை (மே 5) அந்நிறுவனத்துக்கு $240,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் ‘எஸ்எம்ஆர்டி டிரேன்ஸ்’ நிறுவனத்திற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஊழியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அது போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
2020 ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதியன்று 30 வயது திரு முகம்மது அஃபிக் செனாவி, தமது சக ஊழியருடன் இணைந்து ரயில் தொடர்பான பாகங்களை மாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது ஏறத்தாழ 3 கிலோ எடை கொண்ட தடி ஒன்று அவரது முகத்தின் மீது மிக வலுவாகப்பட்டது.
திரு அஃபிக், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் முகத்திலும் நெஞ்சுப் பகுதியிலும் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அதே நாள் காலை 10.15 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

