மத்திய விரைவுச்சாலையில் இரு கார்கள், டாக்சி ஒன்று சம்பந்தப்பட்ட விபத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 44 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 7ஆம் தேதி நடந்த அச்சம்பவம் குறித்து தங்களுக்கு அன்றைய தினம் அதிகாலை 3.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
சிலேத்தார் விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் அந்த விபத்து நடந்ததாகக் கூறப்பட்டது.
65 வயது டாக்சி ஓட்டுநரும் காரில் பயணம் செய்த 33 வயது பெண் பயணியும் டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் அழைத்துச்செல்லப்பட்டனர்.
எஸ்ஜி ரோடு விஜிலாண்டேவின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட காணொளியில், சாலையின் வலது பக்க வழித்தடத்தில் வந்த கறுப்பு நிறக் கார் திடீரென தடங்கள் மாறி பயணித்து, சாலையின் இடது பக்கத்தில் சென்ற வெள்ளை நிறக் கார்மீது மோதியதைக் காண முடிகிறது.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த வெள்ளை நிறக் கார் மற்றொரு டாக்சியுடன் மோதியதையும் அந்த டாக்சி சாலையின் தடுப்பின்மீது மோதியதையும் அதில் பார்க்கலாம்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

