ஜூரோங் வெஸ்ட்டில் சனிக்கிழமை (நவம்பர் 14) நடந்த விபத்தில் 31 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த நான்கு நாள்களில் நிகழ்ந்த மரண விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தது நான்காக அதிகரித்துள்ளது.
ஜாலான் பகாரை நோக்கிச் செல்லும் ஜாலான் பூன் லேயில் நிகழ்ந்த விபத்து குறித்துத் தங்களுக்குக் காலை 6.50 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
சுயநினைவற்ற நிலையில் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மோட்டார்சைக்கிளோட்டி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது வாகனம் சறுக்கியதாக நம்பப்படுகிறது எனக் கூறிய காவல்துறை, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது. நவம்பர் 11 முதல் 13 வரையிலான காலகட்டத்தில் நேர்ந்த மேலும் மூன்று மரண விபத்துகளைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில், சைக்கிளோட்டிகளும் சரக்கு லாரிகளும் மோதிக்கொண்ட இரண்டு வெவ்வேறு விபத்துகளும், மின்-சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட ஒரு விபத்தும் நடந்தன.
போக்குவரத்துக் காவல்துறையின் அரையாண்டுப் புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூர்ச் சாலைகளில் மிக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராகத் தொடர்ந்து மோட்டார்சைக்கிளோட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் உள்ளனர்.
இவ்வாண்டின் முதல் பாதியில் நிகழ்ந்த அனைத்துப் போக்குவரத்து விபத்துகளிலும் 45.9 விழுக்காடும், அனைத்து விபத்துகளிலும் 55.6 விழுக்காடும் மோட்டார்சைக்கிள்கள் சம்பந்தப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டது.
