புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஆடவர் ஒருவர் காரைக் கவனமின்றி ஓட்டியதால் நேர்ந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
ஆங் யிசியென் என்ற அந்த 42 வயது ஆடவருக்கு திங்கட்கிழமையன்று (ஜனவரி 13) 22 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு வாகனம் ஓட்ட எட்டு ஆண்டுத் தடையும் விதிக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அந்தத் தடை நடப்புக்கு வரும் என்று சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.
சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் வாகனம் ஓட்டியதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஆங் ஒப்புக்கொண்டார். அவருக்குத் தீர்ப்பளிக்கும்போது அதேபோன்ற மேலும் ஒரு குற்றச்சாட்டும் கருத்தில்கொள்ளப்பட்டது.
விபத்து நிகழ்ந்து மூன்று நாள்கள் கழித்து சம்பந்தப்பட்ட 24 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட காயங்களுக்கு அவர் பலியானார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதியன்று காலை 9.45 மணியளவில் ஆங், தீவு விரைவுச்சாலையை நோக்கிய புக்கிட் தீமா விரைவுச்சாலையின் மூன்றாவது தடத்தில் காரை ஓட்டிச்சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டி, பின்னிருக்கையில் ஒருவருடன் இரண்டாம் தடத்தில் ஓட்டிச் சென்றார்.
மோட்டார் சைக்கிள் அங்கிருந்தது குறைந்தது மூன்றிலிருந்து நான்கு வினாடிகளுக்கு ஆங்கிற்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அப்போது மூன்றாம் தடத்திலிருந்து இரண்டாம் தடத்துக்கு மாறும்போது ஆங், கவனத்துடன் ஓட்டவில்லை என்றும் சரியாக வாகன சமிக்ஞையைச் செயல்படுத்தவில்லை என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
அப்போது ஆங்கின் கார் மோட்டார் சைக்கிளுடன் மோதியது. மோட்டார் சைக்கிளோட்டியும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவரும் கீழே விழுந்தனர். ஆங்கின் கார், இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுவது நூலிழையில் தவிர்க்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
விபத்து நேர்ந்த பிறகு ஆங் தனது காரை நிறுத்தி மருத்துவ உதவி வாகனத்துக்கு அழைத்தார். விபத்துக்கு ஆளான மோட்டார் சைக்கிளோட்டிக்கு மூளையில் அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 2023ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி இரவு அவர் உயிரிழந்தார்.

