சாலை விபத்தில் நிலப்போக்குவரத்து ஆணைய அதிகாரி உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த 19 வயது மோட்டார்சைக்கிளோட்டிக்கு ஈராண்டுகள், மூன்று மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஐந்தாண்டுகளுக்கு எல்லா வகையான வாகனங்களை ஓட்டுவதற்கும் அவற்றுக்கான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அந்த இளையர், காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார். நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது அந்த இளையர் மிகவும் அமைதியாக இருந்ததாகக் கூறப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஆறு குற்றச்சாட்டுகளை ஜனவரி 10ஆம் தேதி அவர் ஒப்புக்கொண்டார். அபாயகரமான முறையில் மோட்டார்சைக்கிளை ஓட்டியது, போதைப்பொருள் உட்கொண்டது தொடர்பிலான குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.
தண்டனை வழங்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற ஏழு குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.
குறிப்பாக, உயிரிழந்த நிலப் போக்குவரத்து அதிகாரி தொடர்புடைய குற்றத்திற்கு அந்த இளையருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிப்பட்டது.
17 வயதில் அந்த ஆடவர் மெத்தம்ஃபெட்டமின் (methamphetamine) எனப்படும் போதைப்பொருளை உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், சிறார், இளையர் சட்டத்தின்கீழ் 18 வயதுக்குக்கீழ் உள்ள குற்றவாளியின் பெயர்களை வெளியிட முடியாது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதி காலை அவர், புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிய சிலேத்தார் விரைவுச்சாலையில் தகுந்த உரிமமின்றி மோட்டார்சைக்கிளை ஓட்டியதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரியான 26 வயது ஸ்டுல்ஃபிக்கா அஹகாசா, மோட்டார்சைக்கிளை நிறுத்துமாறு உத்தரவிட்டபோதும் அந்த இளையர் அவ்வாறு செய்யாமல் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து திரு ஸ்டுல்ஃபிக்கா, அவரை மோட்டார்சைக்கிளில் விரட்டினார். அவ்வாறு சென்றபோது அதிகாரியின் மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

