மோல்மின் பகுதியில் கார் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றில் புதன்கிழமை (ஜூலை 23) சிக்கிய ஒன்பது வயதுச் சிறுவன், சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
பாலஸ்டியர் ரோட்டை நோக்கிச் செல்லும் மோல்மின் ரோடு, சினாரான் டிரைவ் சந்திப்பில் அந்த விபத்து பிற்பகல் 2 மணியளவில் நடந்தது. இதுகுறித்து காவல்துறைக்கும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சிறுவன் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். இந்த விபத்து தொடர்பில் 72 வயது ஆண் கார் ஓட்டுநர் ஒருவர் விசாரணைக்கு உதவி வருகிறார்.
ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு காணொளியில், அந்தச் சிறுவன் துணையின்றி சாலைத் தடுப்புப் பகுதியில் நின்று, பின்னர் சாலையைக் கடப்பதைப் பார்க்க முடிகிறது. வரும் வாகனங்களைப் பார்த்தபடி, ஒரு கார் நெருங்கும் வேளையில் சிறிது நேரம் மெதுவாகச் செல்கிறான்.
பின்னர், அந்தச் சிறுவன் வேகமாகச் சென்று, கார் மோதித் தரையில் விழுவதையும் கார் நின்றதும் ஓட்டுநர் வாகனத்திலிருந்து இறங்க, சிறுவன் எழுந்து நிற்பதையும் காண முடிகிறது.

