பூகிஸ் வட்டாரத்துக்கு அருகில் நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
புதன்கிழமை (செப்டம்பர் 17) இரவு கோல்டன் லேன்மார்க் கடைத்தொகுதிக்கு அருகில், அரபு ஸ்திரீட்டுக்கும் விக்டோரியா ஸ்திரீட்டுக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது.
இரவு 9.50 மணி அளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
அந்த இரண்டு வாகனங்களில் ஒன்றை ஓட்டிய 55 வயது ஆடவர், டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றொருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டபோதும் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
34 வயது ஆடவர் ஒருவர் விசாரணைக்கு உதவி வருகிறார்.

