விளையாட்டு நடுவம் அருகே விபத்து; கருவிகளின் துணையுடன் இருவர் மீட்பு

1 mins read
56d808f0-a159-4177-9e5b-44c18584bcee
மவுண்ட்பேட்டன் ரோடு - குலிமார்ட் ரோடு சந்திப்பில் விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  - படம்: கூகல் மேப்ஸ்

காலாங்கிலுள்ள விளையாட்டு நடுவத்திற்கு அருகே புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நேர்ந்த விபத்தையடுத்து, காருக்குள் சிக்கியிருந்த இருவரைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கருவிகளின் துணையுடன் மீட்டனர்.

அவ்விபத்தில் சிக்கிய நால்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மவுண்ட்பேட்டன் ரோடு - குலிமார்ட் ரோடு சந்திப்பில் நேர்ந்த அவ்விபத்து குறித்து காலை 8 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் இருக்கையில் ஒருவரும் பின்னிருக்கையில் ஒருவரும் சிக்கியிருந்ததாக அது குறிப்பிட்டது.

அவ்விருவரும் நீர்ம அழுத்தக் கருவிகளின் துணையுடன் மீட்கப்பட்டதாகவும் அது கூறியது.

இருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்னொருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து தொடர்பாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளியில், போக்குவரத்துச் சந்திப்பிற்கு அருகே நான்கு குடிமைத் தற்காப்புப் படை வாகனங்களும் அவசர மருத்துவ வாகனம் ஒன்றும் நின்றிருந்ததைக் காண முடிந்தது.

தீயணைப்பு வாகனத்திற்கு அருகே தூக்குப் படுக்கையில் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது. பின்னர் அக்காணொளி இணையத்திலிருந்து அகற்றப்பட்டது.

சிம்ஸ் வேயில் விபத்து நேர்ந்துள்ளதால் முதலாவது, நான்காவது சாலைத் தடங்களைத் தவிர்க்கும்படி காலை 8.20 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவின்மூலம் வாகனவோட்டிகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

குறிப்புச் சொற்கள்