புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) இரவு ஒரு காருடன் ஒரு மோட்டார்சைக்கிள் மோதியதைத் தொடர்ந்து, காரை ஓட்டிய 27 வயது ஆடவர் ஒருவர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
விபத்து குறித்து இரவு 11 மணியளவில் தனக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது 39 வயது மோட்டார்சைக்கிளோட்டியும் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த 36 வயது பெண்ணும் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.
அவ்விருவரும் கூ தெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்தது. உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச்செல்லும் வெள்ளை கார் ஒன்று திடீரென தடம் மாறியது. பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார்சைக்கிள்மீது அது மோதியது.
சிவப்புச் சட்டை அணிந்திருந்த ஆடவர் ஒருவர், சாலையில் விழுந்து கிடந்தார். அவரது வலது கையில் ரத்தக் காயங்கள் தென்பட்டன. அவருக்குப் பக்கத்தில் தலைக்கவசம் கிடந்தது.
தலைக்கவசம் அணிந்திருந்த மற்றொருவரும் சாலையில் விழுந்து கிடந்தார். அங்கிருந்த மற்ற வாகனவோட்டிகள் அவ்விருவருக்கு உதவ முற்பட்டனர்.
விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

