உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே புக்கிட் தீமா விரைவுச்சாலையில் வியாழக்கிழமை (ஜூன் 12) நிகழ்ந்த விபத்தில் காயமுற்ற இரண்டு மோட்டார்சைக்கிளோட்டிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஒரு டிப்பர் டிரக் கனரக வாகனமும் விபத்தில் சிக்கியது குறித்து அதிகாலை 3.45 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்த மோட்டார்சைக்கிளோட்டிகள் சுயநினைவுடன் இருந்தனர். அந்த இரு ஆடவர்களும் 24, 61 வயதுடையவர்கள்.
ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கும் மற்றொருவர் உட்லண்ட்ஸ் ஹெல்த் கேம்பசுக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. விபத்து குறித்த விசாரணை தொடர்கிறது.

