தேசிய தின அணிவகுப்பு 2025ன் தேசியக் கல்விக் காட்சியின்போது கவசவாகனம் ஒன்று போக்குவரத்து விளக்குக் கம்பம் மீது மோதியது.
கவச வாகனம் திசைமாற்றி, பிரேக் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்தது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தற்காப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட கவச வாகனம் மிகுந்த கவனத்துடன் சோதனையிடப்படும் என்று தற்காப்பு அமைச்சின் கர்னல் டேவிட் குவேக் கூறினார்.
நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள போக்குவரத்து விளக்கு மீது கவச வாகனம் மோதியதை அடுத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்தது என்று தற்காப்பு அமைச்சு கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்திருந்தது.
போக்குவரத்து விளக்கு மீது கவசவாகனம் மோதுவதைக் காட்டும் காணொளி ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) அதிகாலை 4 மணிக்குள் அந்த போக்குவரத்து விளக்குக் கம்பம் பழுதுபார்க்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
பொதுமக்கள், சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக கர்னல் குவேக் கூறினார்.

