ஆர்ச்சர்ட் சாலையில் புதன்கிழமை (ஜனவரி 28) காலை நிகழ்ந்த விபத்தை அடுத்து, 13 பேர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
விபத்து நிகழ்ந்த பிறகு சம்பவ இடத்தை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் ஒருவர் படம் எடுத்தார்.
லாரி ஒன்றும் கார் ஒன்றும் கட்டுப்பாடு இழந்து நடைபாதைமேல் ஏறி ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு முன்னால் நின்றுகொண்டிருந்ததை அப்படத்தில் காண முடிந்தது
அந்த லாரிக்குப் பின்னால் காவல்துறை வாகனம் ஒன்று இருந்தது. லாரியின் முன்பகுதியும் பின்பகுதியும் சேதமடைந்திருந்தன. நடைபாதையில் இருந்த இருக்கையும் விபத்தில் சேதமடைந்தது.
ஆர்ச்சர்ட் சாலைக்கும் ஆர்ச்சர்ட் லிங்க்கிற்கும் இடைப்பட்டுள்ள சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்துக் காலை 6.20 மணி அளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஆறு பேர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் ஏழு பேர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஐவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 13 பேரில் 64 வயது கார் ஓட்டுநரும் ஒருவர். எஞ்சிய 12 பேரும் லாரியில் இருந்த வெளிநாட்டு ஊழியர்கள். அவர்கள் 30 முதல் 51 வயதிற்குட்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
விபத்து குறித்த விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.

