பொங்கோல் வட்டாரத்தில் ஒரு காரும் பேருந்தும் மோதிய விபத்தில் காரில் பயணியாக இருந்த 28 வயது மாது உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். காரை ஓட்டிய 30 வயது ஆடவர் நினைவுள்ள நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் காவல்துறையினர் அந்த காரில் சட்டவிரோத மின்சிகரெட் பொருள்களைக் கண்டெடுத்தனர்.
“மின்சிகரெட் தொடர்பான அந்தக் குற்றம் சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்,” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (மே 13) பிற்பகல் 2.50 மணியளவில் தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிய பொங்கோல் ரோட்டில் இவ்விபத்து நிகழ்ந்தது. ஒருவர் செங்காங் பொது மருத்துவமனைக்கும் மற்றொருவர் சாங்கி பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு புதன்கிழமை (மே 14) பதிலளித்தது.
விபத்துக் காட்சிகள் பதிவான படங்களில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் உள்ள சாலைச் சந்திப்புக்கு அருகே பொதுப் பேருந்துக்குப் பின்னால் சாம்பல் நிறக் கார் ஒன்று இருந்தது தெரிந்தது. அந்த கார் பெரிய அளவில் சேதமடைந்ததுபோல் தெரிந்தது.