டாக்சி நிறுத்துமிடத்தில் விபத்து; மருத்துவமனையில் மூவர்

1 mins read
a350ebb7-7b5f-4e19-9155-adb369881c46
வெள்ளை நிற கார் ஒன்று டாக்சிக்குப் பின்புறத்திலிருந்து வந்து மூவர் மீது மோதியது. - படம்: Singapore Roads Accident.com / ஃபேஸ்புக்

சிராங்கூன் சென்ட்ரலில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதிக்கு வெளியே உள்ள டாக்சி நிறுத்துமிடத்தில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஆறு வயது சிறுவனும் அவனது 42 வயது தாயாரும் 48 வயது பெண்ணும் அடங்குவர்.

திங்கட்கிழமை (பிப்ரவரி 10) காலை 7.50 மணி அளவில் விபத்து நிகழ்ந்தது.

விபத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

டாக்சி நிறுத்துமிடத்தில் டாக்சி ஒன்று வந்து நின்றதை அடுத்து, ஒரு சிறுவனுடன் வந்த பெண் டாக்சியின் கதவைத் திறப்பதை அக்காணொளி காட்டியது.

அப்போது வெள்ளை நிற கார் ஒன்று டாக்சிக்குப் பின்புறத்திலிருந்து வந்து அவர்கள் இருவர் மீதும் இன்னொரு பெண் மீதும் மோதியது.

கார் மோதியதில் கீழே விழுந்த பெண், எழுந்து நின்று தமது மகனை நோக்கிச் செல்வதைக் காணொளியில் பார்க்க முடிந்தது.

டாக்சி ஓட்டுநர் டாக்சியிலிருந்து வெளியேறி அந்த வெள்ளை நிற காரை நோக்கிச் சென்றதையும் காணொளி காட்டியது.

தொடர்புடைய செய்திகள்

விபத்துடன் தொடர்புடைய காரை ஓட்டிய 34 வயது பெண் விசாரணையில் உதவி வருகிறார்.

விபத்து நெக்ஸ் கடைத்தொகுதிக்கு வெளியே உள்ள டாக்சி நிறுத்துமிடத்தில் நிகழ்ந்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

59 வயது டாக்சி ஓட்டுநருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்