துவாஸ் வெஸ்ட் ரோடு எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் பேருந்து, லாரி, மோட்டார் சைக்கிள் ஆகியவை விபத்துக்குள்ளானதை அடுத்து, ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து அக்டோபர் 23ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
துவாஸ் அவென்யூ 20க்கும் பைனியர் சாலைக்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது குறித்து மாலை 5.40 மணி அளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
31 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து பேருந்துப் பயணிகளும் 39 வயது லாரி ஓட்டுநரும் 31 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆறு பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் ஒருவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
மற்றொருவருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
விபத்தில் சேதமடைந்த லாரி, பேருந்து ஆகியவற்றைக் காட்டும் படங்கள் சீனமொழி நாளிதழான சாவ்பாவ்வில் பிரசுரிக்கப்பட்டன.