என்யுஎஸ் வளாகத்தில் சிறப்பு வருகையாளர்களுக்கு தங்கும் வசதி

என்யுஎஸ் வளாகத்தில் சிறப்பு வருகையாளர்களுக்கு தங்கும் வசதி

2 mins read
ஓர் ஆண்டில் 8,000 முதல் 9,000 சிறப்பு வருகையாளர்கள் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துக்கு வருகின்றனர்
1a57e2dd-20d9-4211-81a9-90f751a09b17
‘த ரிட்ஜ்’ என்று அழைக்கப்படும் புதிய தங்குமிடம், வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இணை ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் தங்கியிருக்கும் விதமாகப் பயன்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துக்கு வருகைதரும் கல்வியாளர்களும், இணை ஆய்வாளர்களும் இங்கேயே தங்கி அவர்களது பணிகளைத் தொடர, பல்கலைக்கழக வளாகத்தில் புதிய வசதிகளுடன் கட்டடம் ஒன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) திறக்கப்பட்டது.

‘த ரிட்ஜ்’ என்ற பெயரில் அக்கட்டடம், தற்போதைய கணினி, வர்த்தகப் பள்ளிகளுக்கு அருகிலும் கென்ட் ரிட்ஜ் மாநாட்டு மண்டபம் எதிரிலும் அமைந்துள்ளது.

எட்டு மாடிகளுடன் 185 வருகையாளர் அறைகள், ஒரு சந்திப்பு அறை, கல்விசார் நிபுணத்துவ கலந்துரையாடல்களுக்கு உகந்த திறந்தவெளிப் பொதுப் பகுதிகள் என பல புது வசதிகள் அங்கு உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருகை தரும் கல்வியாளர்கள், இணை ஆய்வாளர்கள், தொழில்துறைப் பங்காளிகள், நிர்வாகத் திட்டத்தில் பங்கேற்போர், பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று மாநாடுகளில் கலந்துகொள்வோர் போன்றோர் ஒரு மாதம் வரை தங்கியிருக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அங்குள்ள வசதிகளையும் அறைகளையும் சுற்றுலாப் பயணிகளோ, பொதுமக்களோ முன்பதிவு செய்துகொள்ளமுடியாது.

வெளிநாட்டு வருகையாளர்கள் பல்கலைக்கழகத்தில் இயங்கும் இதர கல்வி நிலையங்களுக்கு அருகிலேயே இருந்து, ஆய்வுகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள இந்தப் புது வசதிகள் ஏதுவாக அமையும்.

இதற்கு முன்பாக, அவ்வாறு வருகைதருவோர், அவர்களது சொந்த ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்துக்கு வெளியே மாற்று தங்கும் வசதிகளைச் செய்துகொள்ளவேண்டியிருந்தது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு, வெளிநாடுகளில் இருந்து என்யுஎஸ் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருவோர் எண்ணிக்கை பன்மடங்கு வளர்ந்துள்ளதாகப் பல்கலைக்கழக உள்கட்டமைப்புக்கான துணைத் தலைவர் கோ யான் லெங் தெரிவித்தார்.

ஓர் ஆண்டில் 8,000 முதல் 9,000 கல்விமான்கள், ஆய்வாளர்கள், மாநாடுகளில் கலந்துகொள்வோர் உள்ளிட்ட வெளிநாட்டு வருகையாளர்களை என்யுஎஸ் வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்கல்விஆய்வுமாநாடுஉள்கட்டமைப்புகட்டடம்