ஈசூனில் ஜூலை 27ஆம் தேதி நடந்த கொலைச் சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 49 வயது எஃபெண்டி யூசோஃப், கொலை செய்யப்பட்ட 35 வயது ஃபிக்ரி சூ இஸ்கந்தர் இருவரும் புளோக் 803 ஈசூன் ரிங் ரோட்டில் உள்ள 10வது மாடி வீட்டில் ஒன்றாகத் தங்கியிருந்ததாகக் கூறப்பட்டது.
சம்பவ நாளன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாகத் தெரிகிறது. அது கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்பட்டது.
ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10.15 மணியளவில் எஃபெண்டியைக் காவல்துறையினர் அந்த வீட்டிற்கு மீண்டும் அழைத்துச் சென்றனர்.
கறுப்பு வேனில், கைகளில் விலங்குடன் காவல்துறை அதிகாரிகள் நால்வர் அவரை அங்கு அழைத்துச் சென்றனர்.
மாண்ட ஆடவரின் உடல் காணப்பட்ட 10வது மாடியின் மின்தூக்கி நிறுத்திமிடத்திற்கு முதலில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டிற்குள்ளும் எஃபெண்டியை அழைத்துச் சென்ற அதிகாரிகள், அந்த வீட்டின் வரவேற்பறை, சமையலறை போன்ற இடங்களுக்கு அவருடன் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவரை வேனில் ஏற்றிச் சென்றனர்.
அந்த வீட்டிற்குள் ஊடகத்தினர் அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக, ஜூலை 27ஆம் தேதி, காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் உரத்த குரலில் யாரோ சண்டையிடுவதைக் கேட்டுக் கண் விழித்ததாகக் குடியிருப்பாளர்கள் சிலர் கூறினர்.
பின்னர் மின்தூக்கி நிறுத்துமிடத்தில் கொடூரக் காட்சியைக் காண நேர்ந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தகவலறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோது திரு ஃபிக்ரி நினைவற்ற நிலையில் அங்குக் காணப்பட்டார். அவரைச் சோதித்த மருத்துவ உதவியாளர்கள் அவர் மாண்டுவிட்டதாகக் கூறினர்.
சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட எஃபெண்டி மீது மறுநாள் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.