நிறுவனங்கள் தங்களுடைய வருடாந்திர வருமான விவரங்களை தாமதமாக பதிவு செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படாது என்று அக்ரா எனும் கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.
ஆணையத்தின் ‘பிஸ்ஃபைல்’ தளத்தின் மின் சேவை பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதையொட்டி நிறுவனங்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வருமான விவரங்களை பதிவு செய்வதற்கான கடைசி தேதியாகும். ஆனால் அதன் பிறகு அவகாசம் மும்முறை நீட்டிக்கப்பட்டது.
வர்த்தக உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், வர்த்த சேவை வழங்குவோர் மறுசீரமைக்கப்பட்ட பிஸ்ஃபைல் தளத்தைப் பயன்படுத்துவதில் டிசம்பர் 9ஆம் தேதியிலிருந்து சிக்கலை சந்தித்து வந்தன.
புதிய நிறுவனத்தை பதிவு செய்வதில் தாமதம், நிறுவனத்தின் முக்கிய நியமனங்களை பதிவு செய்ய முடியாமல் போனது உள்ளிட்ட பிரச்சினைகளை நிறுவனங்கள் எதிர்நோக்கின.
பிஸ்ஃபைல் தளத்தில் விவரங்களும் முழுமையாக இடம்பெறவில்லை.
இத்தகைய பிரச்சினைகள் இருப்பதை பிப்ரவரி 15ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஒப்புக் கொண்ட அக்ரா, டிசம்பர் மாதத்திலிருந்து தொழில்நுட்ப நிறுவனத்துடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாகக் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
நிறுவனங்களைப் பதிவு செய்தல், வருமான விவரம் உள்ளிட்ட பெரும்பாலான சேவைகள் தற்போது செயல்படுவதாக அக்ரா மேலும் தெரிவித்தது.