தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

30 நன்னீர் ஆமைகளை இந்தோனேசியாவிற்கு திருப்பி அனுப்ப ஏக்கர்ஸ் திட்டம்

2 mins read
93c3bd24-aab4-4c7b-b179-c5ef4e41fd47
ஏக்கர்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் பாலகிருஷ்ணன், சுங்கை தெங்காவில் உள்ள தனது வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பன்றி மூக்கு ஆமையை ஏந்தி நிற்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வனவிலங்கு வர்த்தகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 30 அழிந்துவரும் பன்றி மூக்கு ஆமைகளை, 2026 ஜனவரியில் இந்தோனேசியாவிற்கு திருப்பி அனுப்ப வனவிலங்கு மீட்புக் குழுவான ஏக்கர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பன்றியின் மூக்கை ஒத்த பெரிய, சதைப்பற்றுள்ள மூக்குகளைக் கொண்டுள்ள இந்த நன்னீர் ஆமைகளைத் திருப்பி அனுப்புவது, குழுவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் லட்சியமான ஒன்றாக இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் பாலகிருஷ்ணன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

ஏக்கர்ஸ் எனப்படும் விலங்கு ஆராய்ச்சி, கல்விச் சங்கம், 2001ல் உருவாக்கப்பட்டதிலிருந்து 70க்கும் மேற்பட்ட விலங்குகளை திருப்பி அனுப்பியுள்ளது.

இதில் அழிவின் விளிம்பில் இருப்பதாகக் கருதப்படும் 51 இந்திய நட்சத்திர ஆமைகளை 2018ல் இந்தியாவிற்கும், 2019ல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு பெரிய ஆசிய குள ஆமைகளை மலேசியாவிற்கும் அனுப்பியதும் அடங்கும்.

ஆனால் பன்றி மூக்கு ஆமைகளை இந்தோனீசியாவுக்கு அனுப்புவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்றார் திரு கலைவாணன்.

அந்த மிகப்பெரிய ஆமைகளைத் திருப்பி அனுப்புவதற்கு இரண்டு விமானப் பயணங்களுக்கும் ஒரு படகுச் சவாரிக்கும் குறைந்தது $40,000 செலவாகும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

பன்றி மூக்கு ஆமை ஒவ்வொன்றும் சுமார் நான்கு முதல் ஆறு கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். அவை முழுமையாக நீர்வாழ் உயிரினங்களாதலால், சொந்த இருப்பிடத்துக்குச் செல்லும் பயணம் முழுவதும் ஈரப்பதத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். இதனால் பயணம் விலை உயர்ந்ததாகவும் சிக்கலானதாகவும் இருக்கும் என்றார் அவர்.

மலேசியாவிற்கு விலங்குகளைத் திருப்பி அனுப்புவதற்கான செலவு மிகவும் குறைவு என்று திரு கலைவாணன் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டாமல் கூறினார். ஏனெனில் விலங்குகளை எல்லையைத் தாண்டி மட்டுமே கொண்டு செல்ல வேண்டியிருந்தது என்று அவர் விளக்கினார்.

சிங்கப்பூரில் பன்றி மூக்கு ஆமைகளைச் செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது சட்டவிரோதமானது. சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர், மலாய் பெட்டி ஆமை ஆகிய இரு வகை ஆமைகளை மட்டுமே இங்கு சட்டபூர்வமாகச் செல்லப்பிராணிகளாக விற்க முடியும்.

குறிப்புச் சொற்கள்