தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறைந்திருக்கும் கயவர்களால் அதிகரிக்கும் இழப்புகள்

4 mins read
சிங்கப்பூரில் இவ்வகை மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள், 6 மாதங்களில் மொத்தம் $126.5 மில்லியன் இழந்துள்ளனர். 2025-இன் முதல் பாதியில், அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 199.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
81e9c0ad-2411-4b6c-8141-1c88075aa436
மோசடி செய்பவர்கள் பயத்தையும் பதற்றம் என வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி, மனிதர்களின் அடிப்படை மனப்பான்மைகளைச் சுரண்டும் வற்புறுத்தல் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். - படம்: கெட்டி இமேஜஸ்

மோசடி உத்திகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன, குறிப்பாக அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள் அதிகரித்துள்ளன.

திருவாட்டி ஜாக்குலின் லியோங் இரு வாரங்களுக்கு ஒருமுறைத் தமது மாமியார் குடும்பத்துடன் உணவருந்தச் செல்வது வெறும் குடும்பப் பிணைப்பிற்கான சந்தர்ப்பமாக மட்டுமின்றி அவர்களைப் பாதுகாப்பாகவும் விவேகமாகவும் வைத்திருக்கச் செலவிடும் நேரமாக அமைகிறது.

சந்தைப்படுத்தல் துறையில் பணியாற்றும் 40 வயதான ஜாக்குலின், செய்திகள் வழியே தாம் அறியும் அண்மைய மோசடி உத்திகள் குறித்துத் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும், தனியாக வசிக்கும் 70 வயது மாமனார் மாமியாருக்கும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

அவரது மிகப்பெரிய கவலைகளில் ஒன்று? அரசு அதிகாரிகள்போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகள். இதில் மோசடிப் பேர்வழிகள் காவல்துறை, குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம், சிங்கப்பூர் நாணய ஆணையம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள்போலத் தங்களை காட்டிக் கொள்வார்கள்.

மோசடிப் பேர்வழிகள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் பணமோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பவைப்பார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவர்களைத் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை விசாரணைக்காக ஒரு “பாதுகாப்பு கணக்கிற்கு” மாற்றுமாறோ அல்லது பணம் அல்லது தங்கக் கட்டிகளை நேரடியாகக் கொடுக்குமாறோ கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2025-இன் முதல் பாதியில், அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 199.2 விழுக்காடு அதிகரித்து, 1,762 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஏறத்தாழ 126.5 மில்லியன் வெள்ளி இழந்தனர் - இது 88.3 விழுக்காடு அதிகரிப்பாகும். இந்தப் புள்ளிவிவரங்கள் ஆகஸ்ட் 30 அன்று சிங்கப்பூர் காவல்துறை (SPF) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டு மோசடி மற்றும் இணையக் குற்ற அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை.

திருவாட்டி லியோங், தமது மாமனார், மாமியாரைப் போலவே பல மூத்தோரும் இவ்வகையான “அதிகாரப்பூர்வமான விஷயங்கள்” குறித்த எதிர்பாராத அழைப்புகள் வந்தால் பதற்றமடைவார்கள் என்றார்.

இது “மிகவும் அச்சமூட்டுகிறது” என்று கூறிய அவர், “குறிப்பாக மோசடி செய்பவர்களிடம் முழுப் பெயர் உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் இருப்பதும், அவ்விவரங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறும்போதும் பயம் அதிகரிக்கிறது,” என்றார்.

இந்த அச்சத்தினை மோசடிப் பேர்வழிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

“மோசடிகள் நம்மைத் திடுக்கிடச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்றார் சிங்கப்பூர்க் காவல்துறையின் மோசடி பொதுக் கல்வி அலுவலகத்தின் துணை இயக்குனர் திரு ஜெஃப்ரி சின். “மோசடி செய்பவர்கள் பயத்தையும் பதற்றம் என வலுவான உணர்ச்சிகளைத் தூண்டி, மனிதர்களின் அடிப்படை மனப்பான்மைகளைச் சுரண்டும் வற்புறுத்தல் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.”

இந்த உணர்ச்சிபூர்வமான தருணங்களில், “நாம் சூழ்நிலையை விரிவாக ஆராய்ந்து பார்ப்பதை விடுத்து மோசடி செய்பவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க முனைகிறோம்,” என்கிறார் திரு சின்.

“எனவே, இதற்கு யாரும் விதிவிலக்கல்ல,” என்ற அவர், “தொழில்நுட்ப ரீதியாகத் திறமையானவர்களாகத் தங்களைக் கருதும் நபர்கள் கூட மோசடிகளுக்கு ஆளாகிறார்கள்,” என்றார்.

முதல்நிலைத் தற்காப்பு

சிங்கப்பூர்க் காவல்துறையின் அறிக்கைப்படி, 2024-இன் முதல் பாதியில் 26,563 ஆக இருந்த மொத்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் 2025 ஆம் ஆண்டு 19,665 ஆகக் குறைந்துள்ளது. மொத்த மோசடி இழப்புகளும் $522.4 மில்லியனிலிருந்து சுமார் $456.4 மில்லியனாகக் குறைந்துள்ளன.

“வழக்குகளின் ஒட்டுமொத்த சரிவும் மொத்த இழப்புத் தொகையும் குறைந்திருந்தாலும், மோசடி நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது” என்கிறார் திரு. சின்.

பெரும்பாலான மோசடி வழக்குகளில் (78.8 விழுக்காடு) பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை மோசடி செய்பவர்களின் கணக்குகளுக்கு மாற்ற வைப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“மோசடிகளுக்கு எதிரான இப்போரில் அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்படுகிறது,” என்றும் சொன்னார் திரு. சின்.

“அனைவரும் சமூகமாக ஒன்றிணைந்து மோசடிகளை எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது; பொதுமக்கள் தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ளத் தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும்.”

சில தொழில்நுட்ப நிபுணர்கள், தாங்கள் மோசடி செய்ய முடியாத அளவுக்கு “மிகவும் திறமையானவர்கள்” எனும் எண்ணத்தைக் கொண்டிருக்கலாம் - இந்த மனநிலை அவர்களை அலட்சியமாக மாற்றிவிடக்கூடும் என்றும் திரு. சின் கூறினார்.

இந்த அலட்சியம், மோசடி செய்பவர்களின் செயல்திறனைக் குறைத்து மதிப்பிட வழிவகுக்கும். இதனால் விழிப்புடன் செயல்படுவதும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் குறைந்துவிடும்.

இது போன்ற அபாயங்களுக்கு எதிராகப் பாதுகாத்துக்கொள்ள, முன்கூட்டியே சரியான மனநிலையையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்திய திரு. சின், “இது மோசடிகளுக்கு எதிரான நமது ஒன்றிணைந்த எதிர்ப்பை அதிகரிக்க உதவும்.”

2025-இன் முதல் பாதியில்...

வழக்குகளின் எண்ணிக்கையின்படி முதல் 5 மோசடிகள்

  • தூண்டில் மோசடிகள்
  • மின்வணிக மோசடிகள்
  • வேலை மோசடிகள்
  • முதலீட்டு மோசடிகள்
  • அரசு அதிகாரிகளின் ஆள்மாறாட்ட மோசடிகள்

மொத்த இழப்புத் தொகையின்படி

  • முதலீட்டு மோசடிகள்
  • அரசு அதிகாரிகளின் ஆள்மாறாட்ட மோசடிகள்
  • வேலை மோசடிகள்
  • தூண்டில் மோசடிகள்
  • காப்பீட்டுச் சேவை மோசடிகள்

புதிய மோசடி வகை: காப்பீட்டுச் சேவைகள்

$21.3 மில்லியன் - 2025-இன் முதல் பாதியில் பதிவு செய்யப்பட்ட 791 வழக்குகளில், காப்பீட்டுச் சேவை மோசடிகளால் ஏற்பட்ட இழப்புத் தொகை.

மோசடி நடக்கும் விதம்

மோசடி செய்பவர்கள் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள்போல் நடித்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது காலாவதியாகவிருக்கும் சந்தாக்களுக்காகப் பணம் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

அதனை ரத்து செய்ய, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க, தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்ளவும், பணத்தை மாற்றவும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். சரிபார்த்த பிறகு பணத்தைத் திரும்ப அளிப்பதாகப் பொய் வாக்குறுதி அளிக்கப்படும்.

அன்புக்குரியோரை மோசடிகளிலிருந்து பாதுகாக்கவும்.

மோசடி தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

  1. மோசடித் தடுப்பு செயலியைக் கொண்டு மோசடி அழைப்புகளைத் தடுத்து, குறுஞ்செய்திகளை வடிகட்டலாம்.
  2. உங்கள் திறன்பேசிச் சாதனங்களில் ‘ஆன்டி-வைரஸ்’ செயலிகளை நிறுவவும்.
  3. தினசரி செலவுகளுக்குப் போதுமான பரிவர்த்தனை வரம்புகளை அமைத்துக் கொள்ளலாம்.
  4. உங்கள் வங்கிக் கணக்கில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு நடந்தால் உடனடியாக வங்கிக்குத் தகவல் அளிப்பது அவசியம்.

அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் மோசடி அறிகுறிகளைச் சரிபார்க்கவும்

  1. அழைப்பவரின் அழுத்தத்திற்குப் பணிந்து அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்.
  2. மோசடி தடுப்புச் செயலி போன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் மோசடி அறிகுறிகளைச் சரிபாருங்கள்.
  3. 24/7 மோசடி தடுப்பு உதவி எண் (ScamShield Helpline) ஆன 1799-ஐ அழைத்துச் சரிபாருங்கள்.

அதிகாரிகளுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

  1. நீங்கள் மோசடிகளை எதிர்கொண்டால் அல்லது எதிர்கொள்ள நேரிட்டால், அதுபற்றி அதிகாரிகளுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
  2. ஒருவேளை நீங்கள் மோசடியில் சிக்கியுள்ளீர்கள் எனச் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் வங்கியை அழைத்துச் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தடுத்து, காவல்துறைக்கு புகார் அளியுங்கள்.
  3. “மோசடிகளுக்கு எதிராகச் செயல்படுங்கள்” என்ற தலைப்பில், சிங்கப்பூர்க் காவல்துறை, தேசிய குற்றத் தடுப்பு மன்றம் இணைந்து உருவாக்கியுள்ள தொடரின் ஒரு பகுதி இது.
சிங்கப்பூர்க் காவல்துறை, தேசிய குற்றத் தடுப்பு மன்றத்துடன் இணைந்து.
குறிப்புச் சொற்கள்