தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் மீள்திறன் பணிக்குழுவில் தற்காலிக போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ்

2 mins read
769a9595-7ac8-4770-839f-8018326aab9e
தற்காலிக போக்குவரத்து அமைச்சரும் நிதிக்கான மூத்த துணையமைச்சருமான ஜெஃப்ரி சியாவ். - கோப்புப் படம்: பிசினஸ் டைம்ஸ்

பிரதமர் லாரன்ஸ் வோங் மே 21ஆம் தேதி புதிய அமைச்சரவையை அறிவித்ததை அடுத்து, சிங்கப்பூர் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவிலும் (எஸ்இஆர்டி) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்காலிக போக்குவரத்து அமைச்சரும் நிதிக்கான மூத்த துணையமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் அந்தப் பணிக்குழுவில் இணைகிறார். இவ்வேளையில், கல்வி அமைச்சரும் சமூச சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டெஸ்மண்ட் லீ அதிலிருந்து விலகுகிறார்.

சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பின் புதிய தலைவர் டியோ சியோங் செங்கும் அந்தப் பணிக்குழுவில் சேர்கிறார். முன்னாள் தலைவர் லிம் மிங் யானுக்குப் பதில் திரு டியோ அக்கூட்டமைப்பைப் பிரதிநிதிப்பார்.

இந்த மாற்றங்கள் உடனடியாக நடப்புக்கு வருவதாக வர்த்தக, தொழில் அமைச்சு, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவை செவ்வாய்க்கிழமை (மே 27) வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்குழுவின் தலைவரான துணைப் பிரதமர் கான் கிம் யோங், “இந்தப் பணிக்குழுவின் அதிகாரத்தில் மாற்றமில்லை. அனைத்துலக வர்த்தகத்தில் தற்போது நிலவும் நிச்சயமற்ற அம்சங்களைக் கடந்துசெல்ல வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவும் வகையில் முத்தரப்புப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுவதைத் தொடர்வோம்,” என்று கூறினார்.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டான் சீ லெங், தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், தேசிய முதலாளிகள் சம்மேளத்தின் தலைவர் டான் ஹீ டெக் ஆகியோர் எஸ்இஆர்டி பணிக்குழுவில் இடம்பெறும் மற்ற உறுப்பினர்களாவர்.

குறிப்புச் சொற்கள்