பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் சம்பந்தப்பட்ட வழக்கின் தொடர்பில் தாம் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துகளுக்கு, கல்வியாளரான டோனல்ட் லோ மன்னிப்புக் கேட்டு உள்ளார்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் சிறப்புரிமைக் குழுவில் இடம்பெற்றதாக உண்மைக்கு மாறான தகவலை தாம் பதிவிட்டதை ஒப்புக்கொள்வதாக சனிக்கிழமை அவர் தமது ஃபேஸ்புக் வாயிலாகத் தெரிவித்தார்
முன்னதாக, அக்டோபர் 18ஆம் தேதி திரு லோ வெளியிட்ட கருத்தின் தொடர்பில் அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப்போவதாக திருவாட்டி ரஹாயு கூறியிருந்தார்
ஹாங்காங் அறிவியல், தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைக் கழக மூத்த விரிவுரையாளரான திரு லோ சனிக்கிழமை (அக்டோபர் 19) தமது பதிவை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (AGC) சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
திரு லோவின் கருத்து நீதிமன்ற விதிகளை மீறியது என்றும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது என்றும் அந்த அலுவலகம் தெரிவித்து உள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் எந்த ஒரு வழக்கு தொடர்பாகவும் கருத்து சொல்வதில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு தனது அறிக்கையில் அது கேட்டுக்கொண்டு உள்ளது.

