மலேசியாவில் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தாமல் இருக்கும் சிங்கப்பூர் வாகனமோட்டிகள் மீது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.
1990ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு ஜூன் மாதம் வரை சிங்கப்பூரைச் சேர்ந்த வாகனமோட்டிகளுக்கு மொத்தம் 35,000க்கும் அதிகமான போக்குவரத்து அழைப்பாணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் மொத்த மதிப்பு 3.5 மில்லியன் ரிங்கிட் (ஒரு மில்லியன் வெள்ளி) என்று மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனினும், வாகன நுழைவு அனுமதி (விஇபி) முறையைக் கட்டாயப்படுத்தும் முயற்சியில் மலேசியா இறங்கியுள்ள நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சாலைவழி மலேசியா செல்வோர் இவற்றைக் கவனத்தில்கொள்ளவேண்டும்.
வாகன நுழைவு அனுமதி அட்டையைத் தயாராய் வைத்துக்கொள்ளுங்கள்
வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குப் போகும் வெளிநாட்டு வாகனங்கள் அனைத்தும் வாகன நுழைவு அனுமதி அட்டையை வைத்திருக்கவேண்டும். அவ்வாறு செய்யாத ஓட்டுநர்கள் ஜோகூருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் அல்லது அவர்களுக்கு 2,000 ரிங்கிட் (600 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
போக்குவரத்து அபராதத்தைச் செலுத்தவும்
மலேசியாவில் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்தைச் செலுத்தவும்.
மலேசியாவில் உங்களுக்கு போக்குவரத்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் தெரியாதோர் மைபாயார் பிடிஆர்எம் (MyBayar PDRM) அல்லது மைஇஜி (MyEG) இணையத்தளங்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
அபராதம் செலுத்தாவிட்டால்...
அக்டோபர் ஒன்றாம் தேதியன்று விஇபி முறை கட்டாயப்படுத்தப்பட்டதும் எல்லா வெளிநாட்டு வாகனங்களையும் ஓட்டுபவர்கள் மலேசியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் போக்குவரத்து அபராதங்களைச் செலுத்தியிருக்கவேண்டும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஜேபிஜே பேச்சாளர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அக்டோபர் ஒன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அபராதம் செலுத்தாதோர் மீது கட்டங்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி ஒன்று முதல் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.