பயனீட்டாளர்களின் நலன் பாதிக்கப்பட்டால் சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் தலையிடும் என்று வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் தெரிவித்துள்ளார்.
குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைத்தொகுதிகளில் பயனீட்டாளர்களுக்குப் பல தெரிவுகள் இருப்பதை ஆணையம் உறுதி செய்கிறதா என்று ஜூரோங் ஈஸ்ட் - புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஹோ கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு திருவாட்டி லோ செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.
ஒரே வட்டாரத்தில் உள்ள இரண்டு கடைத்தொகுதிகளுக்கு ஒரே உரிமையாளர் இருப்பது குறித்து திரு ஹோ பேசினார்.
கிளமெண்டி கடைத்தொகுதியை த எலிகண்ட் குழுமத்தின் சாவ் சிசாவ்வுடன் தொடர்புடைய நிறுவனம் கொள்முதல் செய்தது. இந்த நிறுவனம் கிளமெண்டி கடைத்தொகுதிக்கு அருகில் உள்ள கிரான்டிரால்மால்@கிளமெண்டி கடைத்தொகுதியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுகுறித்து மதிப்பீடு செய்ய ஆணையத்திடம் அதிகாரபூர்வமாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
நிறுவனங்கள் ஒன்றிணையும்போது அதுகுறித்து சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையத்திடம் தெரிவிக்கத் தேவையில்லை என்று திருவாட்டி லோ கூறினார். ஆனால் போட்டித்தன்மையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சுயமாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதன்மூலம் ஒழுங்குமுறை மேற்பார்வையையும் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்காக ஏற்படும் செலவுகளைக் குறைவாக வைத்திருப்பதையும் சமநிலைப்படுத்தலாம் என்று திருவாட்டி லோ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பயனீட்டாளர்களின் தேவையைப் பொறுத்து குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைத்தொகுதிகளில் கடைகள் உள்ளன என்றார் அவர்.
வேறுபட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவது கடைத்தொகுதியை நடத்துநரின் ஆர்வத்திலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தரம், உற்பத்தி, புத்தாக்கம் ஆகியவற்றைக் குறைக்க விலையை உயர்த்தும் போக்கு கண்டுபிடிக்கப்பட்டால் சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று திருவாட்டி லோ உறுதி அளித்தார்.

