தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூக மன்றச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்: மக்கள் கழகம்

2 mins read
d19eac81-84f5-435c-b70d-edfc39e17ed4
ஹில்வியு ரைஸ்சில் உள்ள பன்னோக்கு மண்டபத்தில் ஆகஸ்ட் மாதம் நடந்த வேலைவாய்ப்பு இயக்கம். - படம்: எஸ்பிஹெச் ஊடகம்
multi-img1 of 2

வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தொண்டூழியத்தை ஊக்குவிக்கவும் சமூக மேம்பாட்டு மன்றங்கள் முற்படுகின்றன. ‘அருகாமையில் வேலைகள்’ எனப்படும் சமூக மன்றத்தின் திட்டம் (The Jobs Nearby @ CDC) குடியிருப்பாளர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கமுடையது. அதேசமயம், குடியிருப்புப் பேட்டைகளில் இயங்கும் நிறுவனங்கள் எதிர்நோக்கும் மனிதவளத் தேவைகளையும் திட்டம் நிறைவுசெய்யமுடியும்.

சிங்கப்பூரில் இயங்கும் ஐந்து சமூக மேம்பாட்டு மன்றங்களும் அவற்றின் முயற்சிகளை மெருகூட்டவிருக்கின்றன. வேலைகள் தேடும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதோடு, சமூகத்தில் தொண்டூழியத்தை ஊக்குவிக்கவும் மன்றங்கள் விழைகின்றன.

சனிக்கிழமை (அக்டோபர் 11) நிகழ்ந்த மக்கள் கழக சமூக கருத்தரங்கில் மக்கள் கழகத் துணைத் தலைவரும் சட்ட அமைச்சருமான எட்வின் டோங், ஒருங்கிணைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேலைவாய்ப்பு, தொண்டூழியம் ஆகிய இரண்டிலும் சமூக மன்றங்கள் பெரிய அளவில் பங்காற்றும் என்று அறிவித்தார். மக்களை திரட்டுவதிலும் ஒருங்கிணைப்பதிலும் சமூக மன்றங்கள் அதிக கவனம் செலுத்தும் எனவும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங் கூறினார்.

வீட்டிற்கு அருகிலேயே வேலை தேடித் தரும் இந்தத் திட்டத்தை பிரதமர் லாரன்ஸ் வோங், தேசிய தின உரை 2025ல் அறிவித்திருந்தார். வீடமைப்புப் பேட்டைகளில் உள்ள நிறுவனங்களின் மனிதவள தேவைகளை இந்தத் திட்டம் வழியாக வேலை தேடுவோருடன் இணைக்கமுடியும்.

தென்மேற்கு சமூக மன்றம் முன்னோடியாக இத்திட்டத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை வாய்ப்பு கண்காட்சியுடன் தொடங்கிவைத்தது. அதன் தொடர்ச்சியாக ஐந்து சமூக மன்றங்களும் மேம்படுத்தப்பட்ட செயல்திட்டங்களை இம்மாதத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளன என்று மக்கள் கழகம் செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொண்டூழியத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

சமூக மன்றங்கள், அடித்தளங்களில் இயங்கும் பங்குதாரர்களின் தொடர்புகளை விரிவுப்படுத்தி, தொண்டூழிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். தனியார்களையும் அமைப்புகளையும் அவரவர் நேரத்திற்கும் திறன்களுக்கும் ஏற்ப தொண்டாற்ற மன்றங்கள் ஒத்துழைக்கும். தொண்டூழியர்களை நிர்வகிக்கவும் அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கப்படும்.

அண்டை வீட்டார்கள் பரிவுடனும் ஒத்துழைப்புடனும் வாழ வேண்டும். அதனால் நுண்சமூகங்களை உருவாக்கி மேம்படுத்தும் முயற்சியை ஊக்குவிக்க சமூக மன்றங்கள் அடித்தள அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் என்று மக்கள் கழகம் மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்