சிங்கப்பூர் அதிகாரிகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) ஆறு இணையத்தளங்களை முடக்கினர்.
அந்த இணையத்தளங்களுக்குப் பின்னால் போலியான அல்லது சரியானவை போல் தெரியாத உரிமையாளர் தரப்புகள் இருந்தது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இணையத்தளங்களுக்குப் பின்னால் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் இருந்தது போலவும் தெரிந்தது.
அந்தச் செயல்பாடுகள், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளைக் (influence-peddling operations) கொண்ட கட்டமைப்பின் செயல்பாடுகளைப் போல் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள், உள்ளூர் செய்தி இணையத்தளங்கள் என்ற போர்வையில் வெளிநாட்டுத் தரப்புகளால் இயக்கப்பட்டவை என்றும் வெறுப்பைத் தூண்டக்கூடிய தகவல்களைப் பரப்ப அவை பயன்படுத்தப்படக்கூடும் என்றும் சிங்கப்பூர் அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
தி சிங்கப்பூர் டைம்ஸ்
அவற்றில் ஒன்று, சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் பதிவுசெய்யப்பட்ட ‘சிங்கப்பூர் டைம்ஸ்’ இணையத்தளமாகும். அதன் கீழே இணையச் சேவை நிறுவனத்துக்கான அடையாள எண் மட்டும் இருந்தது.
அந்த எண், ஜியாங்சு நன்ஃபாங் டிஜிட்டல் டெக்னாலஜி (Jiangsu Nanfang Digital Technology) நிறுவனத்தின் இணையச் சேவை எண் என்பது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சோதனையில் தெரிய வந்தது.
நன்ஃபாங் டிஜிட்டல் டெக்னாலஜி, மொழிபெயர்ப்புச் சேவைகள் போன்றவற்றை வழங்குவதாக அதன் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குக் கிளைகள் இருக்கிறது என்பது தெரிய வந்தது.
ஜியாங்சு நன்ஃபாங் டிஜிட்டல் டெக்னாலஜியின் இணையத்தளங்களில் ஒன்றான சைனா ஃபிரீ டிரேட் நெட்வொர்க், பொதுத் தொடர்பு (public relations) இணையத்தளம் ஒன்றுக்கான இணைப்புகளைக் கொண்டிருந்தது. அந்த பொதுத் தொடர்ந்து இணையத்தளம், ஜியாங்சு நன்ஃபாங் டிஜிட்டல் டெக்னாலஜி அதிகாரி ஒருவரின் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டது தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்த பொதுத் தொடர்பு இணையத்தளம் பரிந்துரைக்கும் எல்லா செய்தித் தளங்களும் ஜியாங்சு நன்ஃபாங் டிஜிட்டல் டெக்னாலஜி நடத்துபவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதர இணையத்தளங்கள்
முடக்கப்பட்ட மற்ற ஐந்து இணையத்தளங்கள், கேமன் தீவுகளில் பதிவுசெய்யப்பட்டவை. அவை அனைத்தும் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி 24 மணிநேரத்துக்குள் பதிவுசெய்யப்பட்டவை. நடுவில் அவை சீனாவின் குவாங்டோங் மாநிலத்துடன் தொடர்புப்படுத்தப்பட்டன.
முடக்கப்பட்ட இணையத்தளங்கள் அதிகமானோரைச் சென்றடையவில்லை என்றும் வெறுப்பைத் தூண்டும் தகவல்களைப் பரப்பும் நடவடிக்கைகளை அவை மேற்கொண்டதாக ஆதாரம் இல்லை என்றும் உள்துறை அமைச்சு, வியாழக்கிழமை தெரிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை, சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தேர்தலை நடத்துவதற்கான உத்தரவாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே செயல்படத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

