சமூக அளவிலான பருவநிலைத் தகவமைப்புத் திட்டங்களுக்குக் கூடுதல் $5 மில்லியன் ஆதரவு

சமூக அளவிலான பருவநிலைத் தகவமைப்புத் திட்டங்களுக்குக் கூடுதல் $5 மில்லியன் ஆதரவு

2 mins read
017026b8-4bf2-4726-aadd-822f9991de59
வெப்பத்துக்கு எதிரான மீள்திறன், வெள்ளத் தடுப்பு, நீர்ச் சேமிப்பு, உள்ளூர் உற்பத்தியை ஆதரித்தல் ஆகியற்றில் புதிய தொகுப்புத்திட்டம் கவனம் செலுத்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூகம் வழிநடத்தும் பருவநிலைத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க, ‘எஸ்ஜி ஈக்கோ’ நிதியின்கீழ் (SG Eco Fund), ஈராண்டுகளில் 5 மில்லியன் வெள்ளி வரையிலான நிதி ஒதுக்கீட்டுடன் புதிய பருவநிலைத் தகவமைப்புத் தொகுப்புத்திட்டம் (Climate Adaptation Package) அறிமுகம் காண்கிறது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 4)நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதனை அறிவித்தார்.

ஏறக்குறைய 500 திட்டங்களுக்கு ‘எஸ்ஜி ஈக்கோ’ நிதி $21 மில்லியனுக்கும் அதிகமான நிதியை 2020ஆம் ஆண்டு முதல் வழங்கியுள்ளது; இத்திட்டங்களில் 700,000க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கியப் பருவநிலைத் தகவமைப்புப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முழுமையான முயற்சிகளுக்கு நிதியளிக்கும் வகையில் இந்தப் புதிய தொகுப்புத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்பத்துக்கு எதிரான மீள்திறன், வெள்ளத் தடுப்பு, நீர்ச் சேமிப்பு, உள்ளூர் உற்பத்தியை ஆதரித்தல் ஆகியற்றில் இது முக்கியமாகக் கவனம் செலுத்தும்.

பருவநிலை அபாயங்கள் அதிகரித்து வருவதால், முழுமையான நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ‘எஸ்ஜி ஈக்கோ’ நிதி தனது வரம்பை விரிவுபடுத்துகிறது.

மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, பருவநிலைத் தகவமைப்புத் தொகுப்புத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் பெற்றுக்கொள்ளப்படும். மேலும், ஆதரவளிக்கக்கூடிய திட்டச் செலவுகளுக்கான நிதியுதவி 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.

இந்தத் தொகுப்புத்திட்டம் 2026 மே 1ஆம் தேதி தொடங்கும்.

பணிச்சூழலில் மீள்திறனை வலுப்படுத்தும் நோக்கில், ‘வெள்ள மீள்திறன் மேம்பாடுகளுக்கான வழிகாட்டிக் கையேடு’ உருவாக்கப்பட்டுள்ளதாகவும் திருவாட்டி கோ கூறினார்.

தொழில்துறையினர் தங்கள் வளாகங்களை வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும் நோக்கில், பொதுப் பயனீட்டுக் கழகம் செயற்கூட்டணி மூலம் தொழில்துறையுடன் இணைந்து இந்த வழிகாட்டிக் கையேட்டை உருவாக்கியுள்ளது.

2026ஆம் ஆண்டின் மத்தியில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் இணையப்பக்கத்தில் இந்த வழிகாட்டிக் கையேடு வெளியிடப்படும். இது, தொழில்துறையின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைவதுடன் நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்குகிறது.

வர்த்தக உரிமையாளர்கள் தாங்களாகவே மதிப்பீடு செய்யும் ‘வெள்ள அபாய மதிப்பீட்டு அட்டவணை’ (DIY Flood Risk Matrix) மூலம் தங்கள் சொத்துகளுக்கு ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை மதிப்பிடவும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்