அறிவுசார் குறைபாடுகள் உள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பயிற்சி மற்றும் கூடுதல் உதவிகளை பெறவுள்ளனர். அதற்காக 4 மில்லியன் வெள்ளி நிதி கிடைத்துள்ளது.
தெமாசெக் அறநிறுவனமும் தொடர்புத்திறன் குறைபாட்டுக்கான வளமை நிலையமும் இணைந்து வாழ்க்கை பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளன. அவர்களுக்கு துணையாக ‘த பெர்பில் பரேட் லிமிடெட்’ (டிபிபிஎல்) தற்போது உதவுகிறது.
சிங்கப்பூரில் அறிவுக்குறைபாடுகள் உள்ளவர்களின் திறன்களை அங்கீகரித்து அவர்களையும் சமூகத்திற்குள் இணைத்துக்கொள்வது டிபிபிஎல்-இன் நோக்கமாக உள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அறநிறுவனம் $4 மில்லியன் நிதியை வழங்க உள்ளது. அதன் மூலம் அறிவுத்திறன் குறைபாடுகள் உள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தங்களது வாழ்க்கைக்கு தேவையான கல்வி, ஆரோக்கியமாக வாழ்வது, தன்னிச்சையாக செயல்படுவது உள்ளிட்ட திறன்களை கற்றுக்கொள்ளலாம்.
இதன் தொடக்கமாக அங் மோ கியோவில் உள்ள ‘புளோரிஷ் பார் லைப்’ நிலையத்தில் தொடர்புத்திறன் குறைபாடு, அறிவு சார்ந்த குறைபாடு உள்ளவர்கள் சிரமமில்லாமல் தங்களது தினசரி வேலைகளை செய்துகொள்ளப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
எளிமையான உணவுகள் தயாரிப்பது, துவைப்பது, வீட்டை சுத்தம் செய்துகொள்வது போன்ற திறன்கள் கற்றுத்தரப்படுகின்றன.
தற்போது ‘புளோரிஷ் பார் லைப்’ நிலையத்தில் மூன்று நாள் பாடத் திட்டம் தொடங்கியுள்ளது. அதில் 5 தொடர்புத்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் தொடர்புத் திறன் குறைபாடு உள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 7,000க்கும் அதிகமானவர்கள் உதவித்திட்டங்களில் இணைந்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் ‘எஸ்ஜி எனேபல்’ அமைப்பும் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்த வாழ்க்கை பயிற்சி திட்டம் தொடர்பான மேல் விவரங்களை www.autism.org.sg என்ற இணையப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

