சிங்கப்பூர்ப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் வேலைச் சுமையைக் குறைத்து நிபுணத்துவ ரீதியில் வளர்ச்சியடைய கல்வியமைச்சும் பள்ளி முதல்வர்களும் கூடுதல் வழிகளைக் கண்டறியவிருக்கின்றனர் என்று கல்வியமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
நல்ல கல்வியாளர்களை ஈர்த்து அத்தகையோரைத் தக்கவைத்து கல்விமுறையை வலுப்படுத்த கல்வியமைச்சு அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கவிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பு வெளியிட்ட அனைத்துலக ஆய்வில் சிங்கப்பூரில் உள்ள ஆசிரியர்கள் மதிக்கப்படுவதாகவும் வேலையில் அதிக திருப்தி கொண்டிருப்பதாகவும் தெரியவந்தது.
மெரியட் டேங் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்ற தேசியக் கல்விக் கழகத்தின் நிபுணத்துவ மாநாட்டில் பேசிய திரு லீ அவ்வாறு கூறினார்.
பிற துறைகளில் இருப்பதைவிட ஆசிரியர்களுக்குக் கூடுதல் வேலைச் சுமை இருப்பதைத் திரு லீ சுட்டினார். கல்வி சாராப் பணிகள் இணையக் கற்றல் ஆகியவை அவற்றுள் அடங்கும்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆசிரியர்கள், கற்றல் ஆகியவற்றுக்கான அனைத்துலக கருத்தாய்வில் சிங்கப்பூரில் உள்ள ஆசிரியர்கள் சராசரியாக வாரத்திற்கு 43 மணி நேரம் வேலை செய்வதாகத் தெரியவந்தது. அது சராசரியான 41 மணி நேரத்தை விட அதிகம்.
நிர்வாகக் கடமைகள், மாணவர்களின் பாடங்களைத் திருத்துவது ஆகியவை ஒருசில வேலைப் பணிகள் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். அதுவே அவர்களின் உளைச்சலுக்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
“அத்தகைய விவகாரங்களை அறிந்து நிர்வாகச் சுமையைச் சமாளிக்கக் கூடுதல் ஆதரவு தருவோம்,” என்று திரு லீ சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பள்ளி நிர்வாகக் குழுக்களை வலுப்படுத்தி செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை அறிமுகம் செய்வதன் மூலம் ஆதரவைப் பெருக்க கல்வியமைச்சு முற்படுகிறது.
“ஆசிரியர்களுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கக் கருவிகளை வழங்கியுள்ளோம். அதன் மூலம் அவர்கள் தங்கள் பணிகளை இன்னும் விரைவாகச் செய்துமுடிக்கலாம்,” என்று திரு லீ சுட்டினார்.
கொள்முதல் செய்வதற்கான நடைமுறையையும் கல்வியமைச்சு எளிமைப்படுத்தும் முன்னோட்டத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடக்கம்தான் என்ற திரு லீ, இன்னும் அதிகம் செய்யப்படும் என்றார்.

