குற்றவாளிகளைப் பிடிக்கக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படும்: மூத்த அமைச்சர் சண்முகம்

குற்றவாளிகளைப் பிடிக்கக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படும்: மூத்த அமைச்சர் சண்முகம்

படம்: சுந்தர நடராஜ்

13 Nov 2026 - 5:34 pm

3 mins read

குற்றங்களைத் தடுக்கவும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் உள்துறைக் குழு அதன் தொழில்நுட்ப முயற்சிகளை விரிவுபடுத்தவுள்ளதாக மூத்த அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.

உள்துறைக் குழுப் பயிற்சிக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நடைபெற்ற அமைச்சர் விருதளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான அவர் அவ்வாறு கூறினார்.

விழாவில் வெளியுறவு, உள்துறை அமைச்சுகளின் இரண்டாம் அமைச்சர் சிம் ஆனும் பங்கேற்றார்.

“இன்றளவில் குற்றவாளிகளைத் துரிதமாகக் கண்டறிய உணர்கருவிகள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக ‘போல்கேம்’ காவல்துறைக் கண்காணிப்பு கருவிகள் விசாரணைகளைப் பெருமளவு எளிதாக்கியுள்ளன.

“ஆகையால், 2030களின் நடுப்பகுதிக்குள் தீவு முழுதும் 200,000க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படும்,” என்று திரு சண்முகம் அறிவித்தார்.

அதோடு, அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து குற்ற விசாரணைகளில் ‘இஆர்பி 2’ தரவுகளும் பயன்படுத்தப்படுமென அவர் தெரிவித்தார்.

உலகில் ஆகப் பாதுகாப்பான நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகத் திகழ உள்துறைக் குழு அதிகாரிகளின் பங்கு இன்றியமையாதது என்பதை அவர் கோடிகாட்டினார்.

“2025ஆம் ஆண்டிற்கான ‘கேலப்’ (Gallup) உலகளாவிய பாதுகாப்பு அறிக்கையின்படி, சிங்கப்பூரில் இரவு நேரங்களில் தனியாக நடந்துசெல்லும்போது தாங்கள் பாதுகாப்பாய் உணர்வதாக 98 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

அதே ஆண்டு நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தாய்வில், உள்துறைக் குழுவின் திறன்மீது நம்பிக்கை இருப்பதாகக் ஏறத்தாழ 95 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே ஆக உயர்ந்த விகிதம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அப்பாதுகாப்பு முயற்சிகளில் முக்கியப் பங்குவகித்த அதிகாரிகளுக்கு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. விருது வென்ற அனைவரின் வலுவான முனைப்பு, குழு முயற்சி, தகவமைத்துக்கொள்ளும் திறன் ஆகியவற்றைத் திரு சண்முகம் பாராட்டினார்.

உள்துறைக் குழுச் சாதனை விருது, உள்துறை அமைச்சு உன்னதச் செயல்பாட்டு விருது, மதிப்பிற்குரிய நட்சத்திரச் சேவை விருது ஆகிய மூன்று விருதுகள் விழாவில் வழங்கப்பட்டன.

‘ஐஸ்மார்ட்’ எனப்படும் செயல்பாடு, சேவை வழங்குதல் கட்டமைப்பை உருவாக்கிய சோதனைச்சாவடிகள் ஆணையக் குழுவின் பிரதிநிதியாக, கடப்பிதழ், அடையாள அட்டைப் பிரிவின் மூத்த மேலாளர் அருணா தேவி, உள்துறைக் குழுச் சாதனை விருதைப் பெற்றார்.

இதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்க அதிகாரிகளுக்கு 11 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில் அதே பணி புதிய கட்டமைப்பால் ஐந்து நிமிடங்களாகக் குறைந்துள்ளது.

“பல ஆண்டுகளாக அதிகாரிகள் கைப்படச் செய்துவந்த பல வேலைகளை எங்கள் குழுவின் பணி தானியக்க முறைக்கு மாற்றியுள்ளது. எங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரத்தை எண்ணிக் குழுவினர் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார் அவர்.

‘ஐஸ்மார்ட்’ முயற்சியில் பணியாற்றிய குழுவினருக்கு உள்துறைக் குழுச் சாதனை விருது வழங்கப்பட்டது. அணியின் பிரதிநிதியாக அருணா தேவி விருதைப் பெற்றுக்கொண்டார்.
‘ஐஸ்மார்ட்’ முயற்சியில் பணியாற்றிய குழுவினருக்கு உள்துறைக் குழுச் சாதனை விருது வழங்கப்பட்டது. அணியின் பிரதிநிதியாக அருணா தேவி விருதைப் பெற்றுக்கொண்டார். - படம்: சுந்தர நடராஜ்

‘கே-பொட்’ மின்சிகரெட்டுகளில் இருந்த எட்டோமிடேட், கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளாக வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு அடிமையானவர்களுக்காக உளவியல் அடிப்படையிலான சிறப்பு மறுவாழ்வுத் திட்டத்தை உள்துறை நிபுணர் சாரா லாவண்யா ஜோசஃபின் குழு குறுகிய காலத்தில் உருவாக்கி நடைமுறைப்படுத்தியது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான மறுவாழ்வுத் திட்டங்கள் வழங்கப்படுவதையும் சிறைச்சாலைச் சிகிச்சைக்கும் சமூகப் பராமரிப்புக்கும் இடையே தடையற்ற தொடர்ச்சி இருப்பதையும் அம்முயற்சி உறுதி செய்தது.

குழுவின் முயற்சியை அங்கீகரிக்கும் வண்ணம் அதற்கு உள்துறை அமைச்சின் உன்னதச் செயல்பாட்டு விருது வழங்கப்பட்டது.

“சிறைச் சேவையில் எங்கள் பணி மக்களுக்குப் பெரிதும் புலப்படாத ஒன்று. எங்கள் பணியை மக்களிடையே கொண்டுசேர்க்க இத்தகைய விருதுகள் பெரிதும் உதவுகின்றன,” என்று திருவாட்டி சாரா கூறினார்.

திருவாட்டி சாரா லாவண்யா ஜோசஃப் உள்துறை அமைச்சின் துணைச் செயலாளர் ஞியாம் ஷி சுன்னிடமிருந்து உள்துறை அமைச்சுச் செயல்பாட்டுத் தொன்மை விருதைப் பெற்றார்.
திருவாட்டி சாரா லாவண்யா ஜோசஃப் உள்துறை அமைச்சின் துணைச் செயலாளர் ஞியாம் ஷி சுன்னிடமிருந்து உள்துறை அமைச்சுச் செயல்பாட்டுத் தொன்மை விருதைப் பெற்றார். - படம்: சுந்தர நடராஜ்

தொழில்நுட்பத்தின் உதவியுடன் உள்துறைக் குழு அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து மெருகேற்றப்படுமென மூத்த அமைச்சர் சண்முகம் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்