மின்சார வாகனங்களுக்கான கூடுதல் விரைவு மின்னூட்டிகள்

மின்சார வாகனங்களுக்கான கூடுதல் விரைவு மின்னூட்டிகள்

1 mins read
62c70e2a-3a3d-4f9c-a430-668c7bdb328b
புதிய விரைவு மின்னூட்ட முனைகள் முதலாவது 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறுவப்படும் என்று இவிஇ தெரிவித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சார வாகனங்களுக்கு வேகமாக மின்னூட்டம் செய்யும் விரைவு மின்னூட்ட முனைகள் (fast charging points) கூடுதலாக எட்டு இடங்களில் அமைக்கப்படவுள்ளன.

ஆறு வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வாகன நிறுத்துமிடங்களும் இரண்டு விளையாட்டு நிலையங்களும் அவற்றில் அடங்கும்.

நிலப் போக்குவரத்து ஆணையம் நடத்தும் அமைப்பான இவிஇ என்றழைக்கப்படும் ‘இவி-எலெக்ட்ரிக் சார்ஜிங்’, அந்தத் விரைவு மின்னூட்டு முனைகளுக்கான குத்தகைகளை எஸ்பி மோபிலிட்டி, கம்ஃபர்ட்டெல்குரோ எஞ்சீ ஆகியவற்றுக்கு வழங்கியதாக புதன்கிழமை (ஏப்ரல் 29) தெரிவித்தது.

ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 31 புளோக்குகள் 317/328, தெம்பனிஸ் ஸ்திரீட் 34 புளோக் 364A, உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13 புளோக்குகள் 101-113, ஹவ்காங் அவென்யூ 8 புளோக்குகள் 643-646/649-662/665-667, சிராங்கூன் அவென்யூ 2 புளோக்குகள் 301/319, ஈசூன் ஸ்திரீட் 72/அவென்யூ 3 புளோக்குகள் 753/774 ஆகியவற்றின் வாகன நிறுத்துமிடங்களிலும் ஜூரோங் வெஸ்ட், புக்கிட் கான்பெரா விளையாட்டு நிலையங்களிலும் பொருத்தப்படும்.

அப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் ஆறிலிருந்து எட்டு 50 கிலோவாட் விரைவு மின்னூட்ட முனைகள் நிறுவப்படும். அதோடு, புக்கிட் கான்பெரா விளையாட்டு நிலையத்தில் மூன்று 7.4 கிலோவாட் மின்னூட்ட முனைகள் நிறுவப்படும்.

புதிய விரைவு மின்னூட்ட முனைகள் முதலாவது 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறுவப்படும் என்று இவிஇ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்