ஓய்வுக்கால வருமானத்தில் சேர்த்துக்கொள்ள தங்களது வீட்டின் குத்தகைக்காலத்தின் ஒரு பகுதியை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) விற்கும் வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை நிலையாக அதிகரித்து வந்துள்ளது.
2024 டிசம்பர் 31 நிலவரப்படி, குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டத்தில் 13,734 குடும்பங்கள் சேர்ந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு அளித்த பதிலில் வீவக பேச்சாளர் தெரிவித்தார்.
2024 ஜூன் 30 நிலவரப்படி இந்த எண்ணிக்கை 12,656ஆக இருந்தது. இத்திட்டத்தில் பங்கெடுத்த குடும்பங்களின் எண்ணிக்கை ஆறு மாதங்களில் 8.5 விழுக்காடு கூடியது.
என்யுஎஸ் வர்த்தகப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் சிங் தியென் ஃபூ, காலப்போக்கில் இத்திட்டத்தில் சேர இன்னும் கூடுதலானோர் விருப்பம் தெரிவிப்பார்கள் எனக் கூறினார். இத்திட்டத்திற்குத் தகுதிபெற 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பதற்கான தேவையை 2030க்குள் அதிகமானோர் பூர்த்திசெய்வார்கள் என்பதே இதற்குக் காரணம்.
ஜூன் 2024ல் 19.9 விழுக்காடாக இருந்த இந்த வயதுப் பிரிவினரின் விகிதம், 2030க்குள் 24.1 விழுக்காடாக அதிகரிக்கும்.
இத்திட்டத்தில் சேர்ந்த ஏறக்குறைய 52 விழுக்காட்டினர், அல்லது 7,182 குடும்பங்கள் மூவறை அல்லது அதற்கும் சிறிய வகை வீடுகளில் வசிப்பதாக வீவக பேச்சாளர் தெரிவித்தார். ஏறக்குறைய 34 விழுக்காட்டினர், அல்லது 4,263 குடும்பங்கள் நாலறை வீடுகளிலும் எஞ்சிய 14 விழுக்காட்டினர், அல்லது 1,929 குடும்பங்கள் ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடுகளிலும் வசிக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர், அல்லது 10ல் ஒன்பது குடும்பங்கள் வீவகவிடம் குத்தகையை விற்றதில் $100,000க்கும் $300,000க்கும் இடைப்பட்ட தொகையைப் பெற்றதாக அப்பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தப் பணம், அவர்களின் மத்திய சேம நிதி (மசேநி) ஓய்வுக்காலக் கணக்கிற்குச் செல்கிறது. இதன்மூலம் மசேநி லைஃப் திட்டத்தின்கீழ் மாதாந்தர வழங்கீடு அதிகரிக்கும். எஞ்சிய தொகை, வீட்டு உரிமையாளர்களிடம் ரொக்கமாக வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஓய்வுக்காலக் கணக்கில் குறிப்பிட்ட ஒரு தொகை நிரப்பப்படும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள் ரொக்கப் பணத்தைப் பெறத் தகுதிபெறுவர்.