சிங்கப்பூரில் உள்ள குடும்பங்களுக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்துவதில் பிரதமர் லாரன்ஸ் வோங் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவிடுவதற்கான திட்டங்களையும் பிள்ளைகளை வளர்ப்பதற்கான கூடுதல் நிதியாதரவையும் அவரது தேசிய தினப் பேரணி உரை முன்னிறுத்தியது.
“இன்றைய குடும்பங்கள் அதிகரித்துவரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன. இளம் தம்பதியர், பிள்ளைகள் கொண்ட குடும்பத்தைத் தொடங்கத் தயங்குகின்றனர். பொறுப்புகளையும் செலவுகளை நினைத்து அஞ்சுகின்றனர். பல பெற்றோரிடமிருந்து இதை நானே கேட்டிருக்கிறேன்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் குடும்பங்களுக்குக் கூடுதலாக எவ்வாறு ஆதரவளிப்பது என்பது குறித்து பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜாவின் தலைமையில் அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு முன்வைத்த பரிந்துரைகளைத் திரு வோங் பகிர்ந்துகொண்டார்.
அதன் அடிப்படையில் பெற்றோருக்கான பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு அதிகரிக்கப்படுகிறது. அதிகமான சிங்கப்பூர்ப் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் கூடுதலான பிள்ளைப் பராமரிப்பு விடுப்புக்குத் தகுதிபெறுவர்.
தற்போதுள்ள பிள்ளைப் பராமரிப்பு விடுப்பும் கூடுதல் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பும் இணைக்கப்பட்டு புதிதாக பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு அறிமுகம் காண்கிறது.
அதன்படி, ஒரு பிள்ளை உடைய பெற்றோர் இனி 8 நாள்கள் வரையிலான பிள்ளைப் பராமரிப்பு விடுப்புக்குத் தகுதிபெறுகின்றனர். அந்தப் பிள்ளை 12 வயதுக்குள் இருக்கவேண்டும்.
இரண்டு பிள்ளைகளுடைய பெற்றோருக்கு இனி 10 நாள்கள் விடுப்பும் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிள்ளைகளுடைய பெற்றோருக்கு இனி 12 நாள்கள் விடுப்பும் வழங்கப்படும்.
தற்போது எத்தனை பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு வழங்கப்படுவதில்லை.
ஆறு அல்லது அதற்கும் குறைவான வயதுடைய இளைய பிள்ளையை உடைய பெற்றோருக்குத் தற்போது 6 நாள் விடுப்பும் அதே இளைய பிள்ளை 7 வயதிலிருந்து 12 வயதுக்கு இடைப்பட்டிருந்தால் 2 நாள் விடுப்பும் வழங்கப்படுகிறது.
“மூத்த பிள்ளைகளுக்கும் பெற்றோரின் அரவணைப்பு தேவை. அவர்களின் தேவைகள் மாறுபட்டிருக்கலாம். அதை நாம் நிராகரித்துவிட முடியாது,” என்ற திரு வோங், மூத்த பிள்ளைகளுக்காகப் பெற்றோர் பெரும்பாலும் வருடாந்தர விடுப்பைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகின்றனர் என்றார்.
தற்போது, பிள்ளைகள் தொடர்பான விடுப்புக்கான செலவுகளை அரசாங்கமும் முதலாளிகளும் ஒருசேரப் பகிர்ந்துகொள்கின்றனர் என்று குறிப்பிட்ட திரு வோங், அதை மறுஆய்வு செய்திருப்பதாகச் சொன்னார்.
இனி, பிள்ளைகள் தொடர்பான அனைத்து விடுப்புகளுக்குமான செலவுகளை அரசாங்கமே முழுமையாக ஏற்றுக்கொள்ளவிருக்கிறது. அது திரும்பத் தரும் தொகையின் உச்சவரம்புக்கு ஏற்ப இருக்கும்.
அரசாங்கத்தின் இந்த உதவியுடன், விடுப்பு எடுக்க முற்படும் பெற்றோருக்கு முதலாளிகளும் முழு ஆதரவைத் தரும்படி பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.
“உங்கள் நிறுவனங்களில் உள்ள பெற்றோரை ஆதரித்து அவர்களுக்குரிய விடுப்பைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுங்கள். நிறுவனத்தின் ஆதரவைப் பெறும் பெற்றோர் வீட்டிலேயும் பணியிடத்திலும் சிறந்த முறையில் செயல்படுவர்,” என்று அவர் வலியுறுத்தினார்.


