தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னோடித் தலைமுறையினருக்குக் கூடுதல் மெடிசேவ் நிரப்புதொகை

2 mins read
dacf8249-c813-491f-89d1-5f047c8380e0
வரும் ஜூலை மாதம் முன்னோடித் தலைமுறையினருக்குக் கூடுதல் மெடிசேவ் நிரப்புதொகை வழங்கப்படும். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இவ்வாண்டு ஜூலை மாதம் சுமார் 300,000 முன்னோடித் தலைமுறையினர் (Pioneer Generation) தங்கள் மெடிசேவ் கணக்குகளில் கூடுதல் நிரப்புதொகை பெறுவர்; மொத்தமாக 160 மில்லியன் வெள்ளிக்கும் அதிக நிரப்புதொகை வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் முன்னோடித் தலைமுறையினரின் மெடிசேவ் கணக்குகளில் 300லிருந்து 1,200 வெள்ளி வரை நிரப்புதொகை போடப்படும். சென்ற ஆண்டு இத்தொகை 250லிருந்து 900 வெள்ளியாக இருந்தது.

1945லிருந்து 1949ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த முன்னோடித் தலைமுறையினருக்கு 300 வெள்ளி நிரப்புதொகை வழங்கப்படும். 1940லிருந்து 1944ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தோருக்கு 500 வெள்ளி கிடைக்கும்.

1935லிருந்து 1939ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தோருக்கு 700 வெள்ளியும் 1934ஆம் ஆண்டு அல்லது அதற்கும் முன்பு பிறந்தோருக்கு 1,200 வெள்ளியும் வழங்கப்படும்.

அதோடு, மோசமான உடல்நலப் பிரச்சினைகள் இருந்துவரும், 1939ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு பிறந்தோருக்கு மேலும் கூடுதல் 50 அல்லது 200 வெள்ளி நிரப்புதொகை வழங்கப்படும். கூடுதலான மெடிசேவ் லைஃப் சந்தா தொகையை செலுத்த அவர்களுக்கு உதவுவது நோக்கம்.

91 வயதுக்கும் மேற்பட்ட முன்னோடித் தலைமுறையினருக்கான மெடி‌ஷீல்டு லைஃப் சந்தாக் கட்டணத்துக்கான செலவை அரசாங்கம் தொடர்ந்து முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்று நிதி அமைச்சு உறுதியளித்தது. வயது குறைந்த முன்னோடித் தலைமுறையினருக்கான சந்தாக் கட்டணத்தில் மூன்றில் இரு பங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மெடி‌ஷீல்டு லைஃப் திட்டம் சென்ற ஆண்டு மறுபரிசீலனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கூடுதல் நிரப்புதொகை முன்னோடித் தலைமுறையினரின் மெடிசேவ் கணக்குகளில் தானாகவே போடப்படும்.

இம்மாதம் இரண்டாம் தேதிக்கு முன்பு தங்களின் கைப்பேசி எண்களை சிங்பாஸ் கணக்குகளில் பதிவுசெய்த முன்னோடித் தலைமுறையினருக்கு நிரப்புதொகை குறித்து இம்மாதம் 18ஆம் தேதிக்குள் குறுந்தகவல் அனுப்பப்படும். எவ்வளவு கூடுதல் நிரப்புதொகையை அவர்கள் பெறுவர் என்ற விவரம் குறுந்தகவல்வழி தெரியப்படுத்தப்படும்.

இதர முன்னோடித் தலைமுறையினருக்கு இம்மாத இறுதிக்குள் இதுகுறித்த கடிதங்கள் அனுப்பப்படும்.

குறிப்புச் சொற்கள்